• Nov 19 2024

மார்கழி திங்கள் திரைப்படத்தின் விமர்சனம்... கதை நல்லா இருக்கு ஆனா கருத்து இல்லையே... முதல் ஆரம்பமே இப்படியாகிட்டே...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

திண்டுக்கல் மாவட்டம் நெய்காரபட்டியில் தன் தாத்தாவுடன் வாழ்ந்து வருகிறார் ஹீரோயினி. தாத்தா கதாபாத்திரத்தில் பாரதிராஜா  நடித்திருக்கிறார்.   தாய், தந்தையை இழந்த கவிதா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகை ரக்‌ஷனா. பத்தாம் வகுப்பு படிக்கும் கவிதாவிற்கும், அவரின் சக வகுப்பு மாணவரான வினோத்திற்கும் யார் முதல் மதிப்பெண் எடுப்பது என்ற போட்டி எழுகிறது. வினோத் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஷியாம் செல்வம்.


போட்டி அப்படியே அப்படியே காதலாகவும் மாறுகிறது. தன் மீது உயிரையே வைத்திருக்கும் தன் தாத்தாவிடம் வினோத்தின் காதலைப் பற்றிச் சொல்கிறார் கவிதா. ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவரான தாத்தா, தன் பேத்தியை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வினோத்திற்குத் திருமணம் செய்து வைக்கத் தயங்குகிறார். அதனால், காதலை முழுமனதாக ஏற்கவும் இல்லாமல், மறுக்கவும் இல்லாமல், காதலர்களுக்கு ஒரு நிபந்தனையை விதிக்கிறார்.


அந்த நிபந்தனையாலும் காதலுக்கு எதிராக நிற்கும் ஆதிக்க சாதியினராலும் காதலர்களின் வாழ்க்கை என்னவாகிறது என்பதைப் பேசுகிறது மனோஜ் பாரதிராஜாவின் 'மார்கழி திங்கள்' திரைப்படம்.அறிமுக நடிகர் ரக்‌ஷனா,  நடிகர் ஷியாம் செல்வம், தன் தளர்ந்த உடலாலும், குரலாலும் படத்திற்கு உயிரூட்டப் போராடியிருக்கும் பாரதிராஜா படத்திற்குப் பலம். அவரை இன்னும் ஆழமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஓரிரு வசனங்களை மட்டும் பேசி விட்டு, செட் பிராப்பர்ட்டி போலப் படம் முழுவதும் வந்து போகிறார்.


90களின் பிற்பகுதியில் நடக்கும் கதைக்களத்திற்கு, 90களுக்கும் முந்தைய திரைமொழியைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். வாய்ஸ் ஓவர்கள், மேடை நாடக பாணியிலான கதாபாத்திர அறிமுகங்கள், காட்சியமைப்புகள், நடிகர்களின் செயற்கையான நடிப்பு, கதைக்களத்துக்கே செல்லாமல் நீளும் சுவாரஸ்யமற்ற திரைக்கதை, நேர்த்தியற்ற தொழில்நுட்ப முயற்சி என முதல்பாதி முழுவதுமே முதிர்ச்சியற்ற திரையாக்கமே வெளிப்படுகிறது.


அதே சமயம், இதற்கு நேர்மாறாக, இறுதிப் பகுதியில் திரைக்கதையும், திரையாக்கமும் தூக்கத்திலிருந்து எழுந்து நின்று, நம்மையும் இருக்கையிலிருந்து நிமிர வைக்கின்றன. திரைக்கதை திருப்பங்கள், பரபரப்பிற்குத் தேவையான பின்னணி இசை, கவிதா கதாபாத்திரத்தின் ஆக்ரோஷமான நடிப்பு எனக் கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே விறுவிறுப்பைத் தருகின்றன.


கிராமங்களில் நிலவும் சாதிய ஆதிக்கம், பெண்களைச் சுற்றிப் பின்னப்படும் சாதிய கட்டுமானம்  போன்றவற்றைக் கருப்பொருளாக எடுத்துக்கொண்ட இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால், இறுதிக்காட்சியில் பிரதான கதாபாத்திரம் எடுக்கும் முடிவை ஆமோதிக்கும் வகையில் படத்தை முடித்திருப்பது இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியரின் அரசியல் புரிதல் குறித்த போதாமையையே காட்டுகிறது. இத்திரைப்படம் பார்வையாளர்களிடத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

Advertisement

Advertisement