• Sep 20 2024

'அப்பா'ன்னு தன்னை கூப்பிட சொன்ன சரத்பாபு... கண்கலங்கிய சிநேகாவின் மகன்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்பாபுவின் மரணமானது திரையுலகையே உலுக்கி உள்ளது. இவரின் மரணத்தைத் தொடர்ந்து பலரும் அவருடனான நினைவலைகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நம்பியாரின் மகள் சிநேகாவின் மகனான தீபக் நம்பியார் கூறிய விடயமானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அதாவது சிநேகாவுக்கு முதலில் கேரளாவைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமாக, அந்தத் திருமணத்தின் மூலம் பிறந்தவர் தான் தீபக். ஆனால் அந்தத் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் நடிகர் சரத்பாபுவுக்கும் சிநேகாவுக்கும் நம்பியார் முன்னிலையில் திருமணம் இடம்பெற்றது. அன்று தொடக்கம் குறிப்பாக 25 ஆண்டுகளுக்கும் மேலாக சரத்பாபு சிநேகா தம்பதி கணவன் மனைவியாக வசித்து வந்தனர்.


இந்தத் திருமணம் தொடர்பாகவும், சரத்பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கிளம்பிய வதந்திகள் குறித்தும் தற்போது பேசி வருத்தப்பட்டிருக்கிறார் தீபக். அதாவது "சிநேகாம்மாவைக் கல்யாணம் செய்யறதுக்கு முன்னாடி அவரே ஒரு பெரிய தொகையை அவங்ககிட்டக் கொடுத்துக் கல்யாணத்துக்குத் தேவையான நகை புடவையெல்லாம் வாங்கிக்கச் சொன்னார் சரத்பாபு சார். 

பிறகு கல்யாணம் முடிஞ்சதும் அவர் எங்கிட்டச் சொன்ன முதல் வார்த்தை ’என்னை பாபுஜின்னே கூப்பிடு’ங்கிறதுதான். அதாவது அப்பான்னே தன்னை அவர் கூப்பிடச் சொன்னார். சொன்னது மட்டுமில்லாமல், தன்னுடைய மகனாகவே நினைச்சு என் மீது அதிகமான பாசம் காட்டினார். மேலும் என்னுடைய திருமணத்தின் போதும் சில பிரச்னைகள் வந்தது. நானுமே ஒரு பைசா கூட வரதட்சனை வாங்காமத்தான் கல்யாணம் செய்தேன். ஆனா எனக்கு மனைவியா வந்தவங்க என் மீது வரதட்சனை புகார் சொல்லி என்னைக் கைது செய்ய முயற்சி பண்ணினாங்க. 


அந்த சமயத்தில் எங்கம்மாவும் சரத்பாபு சாரும் பட்ட வேதனை எனக்கு மட்டும்தான் தெரியும். பிறகு ஒருகட்டத்துல சரத்பாபு சாருக்கும் அம்மாவுக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சு. ஆனாலும் அதுக்குப் பிறகுமே அம்மாவிடம் அவர் நலம் விசாரிப்பார். ரொம்பவும் அக்கறையா இருந்தார். என்மீது எப்பவும் போல அதே பாசத்துடனேயே பழகினார்" என்றார்.

அதுமட்டுமல்லாது "சொல்லப்போனால் மொத்தத்துல மனுஷன் ரொம்பவே ஜென்யூன். தங்கமான  மனிதர். ஆனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் அவரைப் பத்தி வெளியில இருந்து யார் யாரோ என்னென்னவோ தவறான தகவல்களையெல்லாம் பேசினாங்க. ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு.

அத்தோடு மீடியாக்களும் சமூக வலைதளங்களும் அவசரப்பட்டு தப்பான தகவல்களை வெளியிட்டாங்க. அந்தச் சமயத்துலெல்லாம் கடவுளே அப்பாவைக் காப்பாத்துன்னு வேண்டினேன்" என மிகவும் உருக்கமாக பேசிய தீபக், தன் வாழ்வில் தன் சொந்த அப்பாவுக்கும் மேலாக உதவியிருக்கிற சரத்பாபுவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதாகவும் கண் கலங்கியவாறு கூறியிருக்கிறார்.

Advertisement

Advertisement