• Nov 19 2024

சரத்குமார், அசோக் செல்வன் இணைந்து மிரட்டும்... 'போர் தொழில்' படத்தின் திரை விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் 'போர் தொழில்'. க்ரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தினுடைய திரைவிமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்கரு 

அந்தவகையில் அகாடமியில் சிறந்தவராக விளங்கும் பிரகாஷ் (அசோக்செல்வன்) போலீஸ் பணியில் சேர்கிறார். அங்கு திறமையும் கண்டிப்பும் மிகுந்த ஒரு க்ரைம் பிராஞ்ச் மேலதிகாரியாக இருக்கிறார் லோகநாதன் (சரத்குமார்). 

அந்தசமயத்தில் சரத்குமாரிடம் அசோக்செல்வனை டிரெயினிங் அனுப்புகிறார்கள். அவரை வேண்டா வெறுப்பாக, திருச்சியில் நடக்கும் தொடர் கொலைகள் தொடர்பான வழக்கை விசாரிக்க அழைத்துச் செல்கிறார் லோகநாதன் என்ற சரத்குமார். 

இதனால் தன்னுடைய பயத்தை மறைத்து பிரகாஷ் தனது புத்தக அறிவையும் திறமையையும் வைத்து லோகநாதனிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகப் போராடுகின்றார். ஆனால் அவரைத் தொல்லையாக பார்க்கிறார் அதிகாரி.

மறுபுறம் எந்தவொரு தடயமும் இல்லாமல் தொடர்ச்சியாக கொலைகளை கொலைகாரன் செய்து வர, டிபார்ட்மென்ட்டுக்குள் இருக்கும் சக அதிகாரிகளின் அரசியல் நெருக்கடிகளும் லோகநாதனுக்குத் தொடர்கிறது. இந்த நிலையில் தான் பிரகாஷின் ஆர்வத்தை புரிந்து கொண்டு மெல்ல மெல்ல அவருக்கு கள பயிற்சியை தருகிறார் லோகநாதன். 

இவ்வாறாக பெண்களை தொடர்ச்சியாக கொலை செய்யும் அந்த சீரியல் கில்லர் யார்? அவனின் நோக்கம் என்ன? இந்த வழக்கை லோகநாதன்- பிரகாஷ் எப்படி கையாண்டனர்..? என்பதுதான் ‘போர்தொழில்’ படத்தின் உடைய மீதிக்கதை.


சரத்குமார் - அசோக் செல்வன் காம்போ!

முதலில் சரத்குமார் - அசோக் செல்வன் இணையை இந்தப் படத்துக்கு தேர்ந்தெடுத்தமைக்காக புதுமுக இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு பாராட்டுகள் கூறலாம். ஏனெனில் புகழ்பெற்ற ஷெர்லாக் ஹோம்ஸ் - ஜான் வாட்சன் கதாபாத்திரங்கள் ஆகிய இணையரைப் போன்று, சரத்குமார் - அசோக் செல்வன் இருவரையும் கோலிவுட்டின் வெற்றிகர இணையாக  மாற்றி திரையில் உலவ விட்டிருக்கிறார் இயக்குநர்.

நடிகர்களின் நடிப்பு

அனைத்து ஆஃபிஸர்களிடமும் கடுப்படிக்கும் சரத்குமார் அமோக நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார். அந்தவகையில் அசோக் செல்வனிடம் விறைப்பு காட்டுவது, அவரது சாதுர்யத்தை ஒரு கட்டத்தில் ரசிப்பது, சைக்கோ கில்லருக்கு பாவம் பார்க்க மறுப்பது, உணர்ச்சிவசப்படுவது அனைத்திலும் திறம்பட நடித்துள்ளார்.

அடுத்து அசோக் செல்வனை எடுத்துக் கொண்டால் ரொமாண்டிக் காமெடி படங்களில் லைக்ஸ் அள்ளி சென்ற இவருக்கு இதில் சற்று வித்தியாசமான கதாபாத்திரம் என்று கூறலாம். மேலும் இதில் பேசத் தெரியாமல் உளறிக்கொட்டினாலும் பணியில் கெட்டியாக வலம் வருவது, ஏதாவது செய்து சரத்குமாரை இம்ப்ரெஸ் செய்துவிடத் துடிப்பது, கள அறிவு இல்லாமல் புத்தக அறிவை உபயோகித்து மாஸ் காட்டுவது என அசோக் செல்வன் ஜாலியாக படத்துடன் நம் மனதை ஒன்ற வைக்கிறார். 

அதேபோன்று நடிகை நிகிலா விமல் அழுத்தமற்ற கதாபாத்திரத்தில் கதைக்கு தேவையானதை செய்கிறார்.


திக் திக் காட்சிகள்

திருச்சி அதனைச் சுற்றியுள்ள காடுகளில் அரங்கேறும் கொலைகள் என முதல் பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. அத்தோடு ‘மெமரீஸ் ஆஃப் மர்டர்’ படத்தை முதல் பாதி ஆங்காங்கே நியாகப்படுத்தினாலும், நம்மை சீட்டின் நுனியில் அமரவைத்து படம் விறுவிறுப்பாக அதிரடித் திருப்பதுடன் நகர்கின்றது.

மேலும் ஜேக்ஸ் பிஜாயின் இசை இந்த படத்துக்கு மிகவும் வலுசேர்த்து சஸ்பென்ஸைக் கூட்டுகிறது. அத்தோடு கலைசெல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு இரவு நேரக் காட்சிகளில் அச்சத்தைக் கூட்டி கதைக்கு மென்மேலும் வலுவூட்டுகிறது.

அதுமட்டுமல்லாது தேடப்படும் கில்லரை காண்பித்துவிட்ட பிறகும் விறுவிறுப்பாக நகரும் படத்தின் இரண்டாம் பாதி அசத்தலாக உள்ளது. 

முந்தைய சில தமிழ் படங்களின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை கவனமாகக் கொண்டு இயக்குநர் கொலையாளியின் பின்னணி கதையை சரியாகவும் வலுவாகவும் கையாண்டிருக்கிறார்கள்.


தொகுப்பு 

மொத்தத்தில் க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு இப்படமானது பிரியாணி விருந்தாக அமைந்துள்ளது எனக் கூறலாம்.

Advertisement

Advertisement