லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள 'கனெக்ட்' திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்றைய தினம் இப்படம் வெளியாகியது. இப்படத்தைத் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த படத்தில், நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில், நயன்தாரா நடித்துள்ளது மட்டும் இன்றி, தன்னுடைய கணவருடன் சேர்ந்து தயாரித்தும் உள்ளார். மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம் குறித்து பார்ப்போம் வாங்க.
கதைக் களம்
கொரோனா லாக்டௌன் அறிவிக்கப்பட, அதனால் சிதைகிறது நயன்தாராவின் குடும்பம். மருத்துவரான அவரின் கணவர் வினய் கொரோனாவால் இறந்து போகிறார். நயன்தாராவுக்கும் அவரின் மகளுக்குமே கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வர நான்கு சுவர்களுக்குள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். வீடியோ காலில் அவ்வப்போது தோன்றும் நயன்தாராவின் அப்பா சத்யராஜ் மட்டுமே அவர்களுக்கான ஒரே ஆறுதல். இப்படியான சூழலில் நயன்தாராவின் மகள் ஹானியா நஃபீஸ் செய்யும் ஒரு காரியத்தால் வீட்டுக்குள் அழையா விருந்தாளியாகப் பேய் ஒன்று வருகிறது. உதவிக்கு ஆளில்லாத லாக்டௌனில் நயன்தாரா அந்தப் பேயைச் சமாளித்து தன் மகளை மீட்டாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
படம் குறித்து அலசல்
மீண்டும் ஒரு சிங்கிள் மதர் பாத்திரத்தில் நயன்தாரா நடித்திருப்பதால் நயன்தாராவின் ரோலில் பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை. மகளாக வரும் ஹான்யா நஃபீஸ்தான் 'கனெக்ட்'டுக்கான பவர்ஹவுஸ் எனலாம். இரு பரிமாணங்களில் வரும் பாத்திரத்தை நன்கு உணர்ந்து அதற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். 'ஜம்ப் ஸ்கேர்' எனப்படும் திடுக்கிடும் காட்சிகளுக்கு அவரின் நடிப்பு பக்கபலமாக இருக்கிறது.
குறிப்பாகச் சட்டென்று தமிழிலிருந்து மலையாளத்துக்குத் தாவும் அவரின் வசனங்களுக்கு ஏற்றவாறு உடல்மொழியிலும் மாற்றங்கள் நிகழ்த்திக் கவனிக்க வைக்கிறார். வினய் கௌரவத் தோற்றத்தில் வந்து போனாலும் முன்களப் பணியாளர்களின் துயரங்களை ஆழமாகப் பதிவு செய்கிறார். கடவுள் நம்பிக்கைக் கொண்ட பாத்திரத்தில் வரும் சத்யராஜின் நடிப்பில் குறையேதுமில்லை. முக்கியமான ரோலில் அனுபம் கேர் திரையை ஆக்கிரமிக்கிறார்.
ஹாரர், அமானுஷ்யம் போன்ற ஜானர்களிலேயே பயணிக்கும் அஸ்வின் சரவணன், மீண்டும் ஒரு சீரியஸான ஹாரர் படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்.திடுக்கிடும் காட்சிகளுக்கும், பரபரப்பான காட்சிகளுக்கும் கூடுதல் பதற்றத்தையும் பய உணர்வையும் தருகின்றது. லாக்டௌன் சினிமா என்பதால் பெரும்பாலும் வீடியோ காலில் மட்டுமே கதாபாத்திரங்கள் உரையாடுகின்றன. அப்படியான வீடியோ காலில் அவ்வப்போது நிகழும் 'Buffering'-யை வைத்தே திகில் உணர்வைக் கூட்டும் அந்த ஐடியாவும் பாராட்டுக்குரியது.
வீடியோ கால்களில் மட்டுமே உரையாடல், சுவர்களுக்குள் மட்டுமே காட்சிகள்... ஆனால் அவற்றை எந்தக் குழப்பமும் இல்லாமல், சலிப்பும் தட்டாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி. டைட்டிலில் வரும் பிரித்வி சந்திரசேகரின் இசை மிரட்டல். படம் நெடுக அவ்வகை இசை பயணிக்காவிட்டாலும் ஒரு சில காட்சிகளில் த்ரில் உணர்வைக் கூட்டியிருக்கிறது.
இப்படி டெக்னிக்கலாக படம் சிறப்பானதாக இருந்தாலும், கதை என்ற விஷயத்தில் ஏமாற்றமே. தோராயமாகப் படத்தை அணுகினால், பேய் பிடித்துவிடுகிறது, அதைப் போராடி விரட்டுகிறார்கள் என்பது மட்டுமே ஒற்றை வரி கதையாக மிஞ்சுகிறது. அது லாக்டௌன் காலத்தில் நிகழ்கிறது என்பது மட்டுமே இதன் 'மாத்தியோசி' ஐடியா. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் சினிமா, வெப்சீரிஸ், ஆந்தாலஜி எபிசோடுகள் எனப் பல லாக்டௌன் கதைகள் ஓ.டி.டி-யிலேயே வந்துவிட்டதால் அதிலும் புதிதாக எதுவுமில்லை.
கதையாக இன்னும் கனம் சேர்த்து, ட்விஸ்ட்கள் வைத்து, அதன் பின்னர் இப்படித் திடுக்கிடும் வகையில் டெக்னிக்கலாகப் பயமுறுத்தியிருந்தால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹாரர் படங்களில் ஒன்றாகியிருக்கும். அந்த வகையில் `கனெக்ட்'டின் கனெக்ஷன் சற்றே பலவீனமானதுதான்.
Listen News!