தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான சிவக்குமாரின் இரண்டாவது மகன் கார்த்தி. அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். அதனையடுத்து அவர் நடித்த பையா, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் அவரது கரியரில் முக்கியமான படங்களாக அமைந்தன.
தொடர்ந்து அவர் நடித்த படங்கள் ஹிட்டாக சில படங்களிலேயே தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். எனினும் இதனையடுத்து பெரிய இயக்குநர்களோடுதான் பணியாற்றுவேன் என்ற கொள்கையை வைத்துக்க்கொள்ளாமல் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்தார். அப்படி அவர் வாய்ப்பளித்த பா.இரஞ்சித், ஹெச்.வினோத், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இப்போது தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநர்களாக ஜொலித்துவருகின்றனர்.
கார்த்தி கடைசியாக பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். அத்தோடு நாவலில் எப்படி கல்கி அந்த கதாபாத்திரத்தை ரசித்து ரசித்து உருவாக்கியிருப்பாரோ அதனை அப்படியே திரையில் தனது நடிப்பின் மூலம் நிஜமாக்கினார் கார்த்தி. வந்தியத்தேவனாக அவர் நடித்திருந்ததை பலரும் ரசித்தனர். குறிப்பாக இந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு பெண் ரசிகைகள் அதிகமாகிவிட்டதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தச் சூழலில் கார்த்தி இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மேலும் அவர் இப்போது பெரிய நடிகராக இருந்தாலும் அவருக்கு முதலில் நடிப்பதில் ஆர்வம் இருக்கவில்லை. இந்நிலையில் படிப்புக்காக அமெரிக்கா சென்ற கார்த்தி அங்கு செய்த வேலை குறித்து அவரது தந்தை சிவக்குமார் பகிர்ந்திருக்கிறார்.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், "கார்த்தி படிப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றான். அப்போது நான் ஏர் ஜெல் பேனா ஒரு டப்பாவையும், 3000 அமெரிக்க டாலர்களையும் கொடுத்து அனுப்பினேன். அங்கு சென்ற அவன், விழுப்புரத்தில் இருந்து வந்த மற்றொருவரை சந்தித்திருக்கிறான். அந்த பையன் ஒரு கம்பெனியில் இவர் பெயர் கார்த்தி. நல்ல ஆர்ட்டிஸ்ட் என்று கூறியிருக்கிறார்.
அத்தோடு அவர்கள் 3,4 டிஸைன்களை கொடுத்து வரைய சொல்லியிருக்கிறார்கள். இவரும் அதை வரைந்து காண்பித்திருக்கிறார். அது அவர்களுக்கு பிடித்துப்போக 4.000 டாலர்கள் சம்பளத்தில் வேலை கொடுத்துவிட்டார்கள். இப்படி படிப்பதற்கு முன்னதாகவே இவருக்கு வேலை கிடைத்துவிட்டது. நான் கொடுத்து அனுப்பிய பணத்தில் அவரது அம்மாவையும், தங்கையையும் அமெரிக்காவுக்கு அழைத்து சென்று சுற்றி காண்பித்தார். நான் கொடுத்து அனுப்பிய ஏர் ஜெல் பேனா டப்பாவை என்னிடமே கொண்டுவந்து கொடுத்துவிட்டார்" என்றார்.
நடிகர் கார்த்திக்கு நடிப்பைவிட இயக்குநராக வேண்டும் என்றுதான் ஆசை. எனினும் இதன் காரணமாக அமெரிக்காவில் இருந்து வந்த அவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக சேர்ந்து ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!