பல அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை .
ஆனால் அவர் கொடுத்த தோல்வி படங்களில் பாபா படம் முக்கியமானது. படத்தின் கதையை ரஜினிகாந்த் எழுத சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு 2002ஆம் ஆண்டு படம் வெளியானது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் விநியோகஸ்தர்களுக்கு ரஜினிகாந்த் பணத்தை திருப்பி கொடுக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. இந்தச் சூழலில் படம் உருவானபோதே இந்தப் படம் ஓடாது என லாரன்ஸ் ரஜினிகாந்திடம் நேரடியாக சொன்ன சம்பவம் தெரியவந்திருக்கிறது.
அதாவது படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு நடனம் அமைக்க ஒரே நடன அமைப்பாளரை தேர்வு செய்யாமல் பலருக்கும் வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். அப்படி அவர் தேர்ந்தெடுத்த நடன அமைப்பாளர்களில் லாரன்ஸும் ஒருவர். அந்தப் படத்தில் மாயா மாயா பாடலுக்கு அவர் நடனம் அமைத்திருந்தார். படம் எடுத்த பிறகுதான் பாடலுக்கான ஷூட் நடந்தது .
ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடனம் அமைப்பதற்கு முன்னதாக படத்தை முழுதாக பார்க்க வேண்டும் என கேட்டிருக்கிறார். ரஜினியும் படத்தை போட்டு காண்பித்திருக்கிறார். படம் பார்த்து முடித்த பிறகு ரஜினிகாந்த்திடம் லாரன்ஸ், 'சார் இந்த படம் நிச்சயமாக ஓடாது' என ஓபனாகவே கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் ஏதோ சொல்லி சமாளித்திருக்கிறார். லாரன்ஸ் சென்ற பிறகு அருகில் இருந்தவர்களிடம், 'லாரன்ஸ் ரஜினி ரசிகராக படத்தை பார்த்திருக்கிறார். சராசரி ரசிகனாக படத்தை பார்க்கவில்லை' என சொல்லிவிட்டு சென்றாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்தார்.
Listen News!