• Nov 14 2024

கொரோனாக்குப் பிறகு நிலைமை மாறிட்டு... தக்‌ஷின் மாநாட்டில் வெற்றிமாறன் ஓப்பன் டாக்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

2023-ஆம் ஆண்டுக்கான தக்‌ஷின் மாநாடு இன்று சென்னையில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதாவது தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறைக்கு தொடர்புடைய வழிகாட்டுதலை வருங்கால சந்ததியினருக்கு வழங்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. 


அந்தவகையில் இன்றைய தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சினிமாப் பிரபலங்கள் வெற்றிமாறன், ரிஷப் ஷெட்டி உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். அதுமட்டுமல்லாது ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளையும் முன் வைத்து இருக்கின்றனர்.


அந்த வரிசையில் வெற்றிமாறம் கூறுகையில் "கலைக்கு மொழி இல்லை, எல்லைகள் இல்லைனு சொல்வாங்க. ஆனா கலைக்கு நிச்சயமா மொழி இருக்கு, கலாச்சாரம் இருக்கு, எல்லைகள் இருக்கு, ஆனால் கலையை நுகர்பவர்களுக்கு அந்த எல்லைகள் இல்லை. கலை அதன் எல்லைக்குள் இருந்து செயல்படும்போது அது கடந்து போகும். கொரோனா ஊரடங்கு சமயத்தில் இதுதான் நடந்தது. நம்ம எல்லாருமே வீட்டில் முடங்கிக் கிடந்தோம். என்ன பண்ணுவது என்று தெரியாமல் இருந்த சமயத்தில் நாம், எல்லா ஓடிடி தளங்களிலும் இருந்து எல்லாவிதமான படங்களையும் பார்க்க ஆரம்பித்தோம். இதன்மூலம் ஒரு எளிய மனிதனும் வெவ்வேறு விதமான சினிமாவை பார்த்து அதை பற்றி புரிந்துகொள்வதற்கான ஒரு இடம் கிடைத்தது. 


லாக்டவுனுக்கு பிறகு தியேட்டருக்கு போய் படம் பார்க்கும் பழக்கம் மாற ஆரம்பித்துள்ளது. காந்தாரா, கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்கள் பான் இந்தியா அளவில் வெற்றிபெற்றதற்கு காரணம் அவை அனைத்துமே அந்த அந்த மக்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள், அவர்களது கலாச்சாரம், அவர்களது நடிகர்கள் என அவங்க ஸ்டைல்ல எடுக்கப்பட்ட படம். அதனால் அவை உலகளவில் ரீச் ஆகின. நம்முடைய கதைகளை நாம் சொல்கிறோம். ஆனால் அதற்கான உணர்வு எல்லை கடந்து ரீச் ஆகிறது " என்றார்.

மேலும் "ஆஸ்கர் வாங்குறது முக்கியமில்லை. மெயின்ஸ்டிரீம் சினிமா பண்ணி ஆஸ்கர் வாங்குறது தான் முக்கியம். நம்ம மக்களுக்கான படம், நம்ம கொண்டாடுற படத்தை, ஆஸ்கர் வரை கொண்டு சென்று அவர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் அதனை தான் நான் ஒரு புரட்சியாக பார்க்கிறேன். தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படம் பார்த்தேன் எனக்கு ரொம்ப புடித்திருந்தது. அதில் காட்டப்பட்டுள்ள எமோஷன் அருமையாக இருந்தது" எனவும் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது "தென்னிந்திய படங்கள் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நாம் நம்முடைய கதைகளை, நம்ம மக்களுக்கான கதைகளை சொல்வதால் தான் அந்த தாக்கம் இருக்கிறது. நாம நம்முடைய அடையாளங்களோட, நம்முடைய தனித்துவங்களோட, நம்முடைய பெருமைகளோட படங்கள் பண்றது தான் நம்முடைய இந்த வளர்ச்சிக்கு காரணம். இதே நிலை தொடரும் என நம்புகிறேன். மற்ற திரையுலகம் அதை பின்பற்றாததால் பின்னடைவை சந்திக்கின்றன" எனவும் அந்த மாநாட்டில் பல விடயங்களை வெளிப்படையாக கூறியுள்ளார் வெற்றிமாறன்.

Advertisement

Advertisement