'அறம்' படத்தின் உடைய இயக்குநரும், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகருமான கோபி நயினார் மற்றும் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் மீது தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ள விடயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிற இலங்கை தமிழரான சியாமளாவிற்கு கடந்த 2018-ஆம் ஆண்டு சினிமா நட்பு வட்டாரங்கள் வாயிலாக தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இதன் பின்னர் தான் இந்த பண மோசடி ஏமாற்று சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது.
அந்தவகையில் இது தொடர்பாக சியாமளா கூறுகையில் "தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் அறம்பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகர் ஜெய்யை வைத்து `கருப்பர் நகரம்' என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும், அந்த படத்திற்கு இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறும் என்னிடம் கூறி இருந்தார்.
இதனால் நான் அவருக்கு பல்வேறு தவணையாக 30 லட்சம் ரூபாய் கொடுத்தேன். மேலும் அதில் 5 லட்சம் ரூபாயை கையில் பணமாக அவரிடம் கொடுத்தேன். இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் பூஜை முடிந்து மூன்று நாட்கள் நடிகர் ஜெய்யை வைத்து கோபி நாயினார் படப்படிப்பு நடத்தி வந்தார். அந்த சூட்டிங்கில் நானும் 3 நாட்கள் கலந்து கொண்டேன்" என்றார்.
மேலும் "அதன் பிறகு ஆறு மாதத்தில் இந்தப் படத்தை சொன்னபடி முடித்துவிடலாம் என்றும், படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இதன் பின்னர் நான் பிரான்ஸ் சென்றுவிட்டேன். இதனைத் தொடர்ந்து விஜய் அமிர்தராஜ் மற்றும் இயக்குநர் கோபி நாயினார் ஆகியோர் என்னுடனான தொடர்பை ஒட்டுமொத்தமாக துண்டித்தனர்.
இதன் பின்னர் தான் நான் அவர்களால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். எனவே இவர்கள் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தலையிட்டு எனது பணத்தை பெற்று தரவேண்டும். அதுமட்டுமல்லாது முதல்வர் ஸ்டாலினும் எனக்கு உதவி புரிய வேணும்" எனவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.
Listen News!