நடிகர் விஜய், சினிமாவில் இருந்து அரசியலுக்குள் நுழைய உள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சு அடிபட்டு வருகிறது. அதன் முதல் படியாக நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவும் ஒரு சான்றாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி கவுரவிக்கும் விழாவை நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த பிரம்மாண்ட விழா நடந்தது. இதில் சுமார் 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
வந்திருந்த 1500 மாணவ, மாணவிகளுக்கு தன் கையால் பரிசளிக்க வேண்டும் என முடிவெடுத்து வந்த விஜய், காலை 11 மணிக்கு பரிசளிக்க தொடங்கினார். அவர் சீக்கிரமாக நிகழ்ச்சி முடிந்துவிடும் என்கிற ஐடியாவில் வந்திருக்க, ஆனால் அங்கு நடந்த சம்பவமே வேறு. விஜய்யை சந்திக்க வந்த மாணவ, மாணவிகள் அவருக்காக கவிதை, பாட்டு என பலவற்றை எழுதி வந்திருந்ததால், அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அதையெல்லாம் கேட்டு மகிழ்ந்தார் விஜய்.
சரி மாலையில் நிகழ்ச்சி முடிந்துவிடும் என பார்த்தால், அந்நிகழ்ச்சி முடிவடைய இரவு 11.45 மணி ஆனது. சுமார் 13 மணிநேரம் நடந்த இந்நிகழ்ச்சி முழுக்க மேடையிலேயே நின்று கொண்டிருந்த விஜய், இறுதிவரை பொறுமை இழக்காமல் வந்திருந்தவர்களுக்கு சிரித்த முகத்தோடு பரிசுகளை வழங்கி வியப்பில் ஆழ்த்தினார். ஒரு கட்டத்தில் கால் வலி தாங்க முடியாமல் அங்கிருந்த மேசையில் சாய்ந்து நின்றார் விஜய்.
நிகழ்ச்சி இரவு வரை நீண்டதால், வந்திருந்தவர்களுக்கு உடனடியாக இரவு உணவு தயார் செய்யச் சொல்லி உத்தரவிட்ட விஜய், அனைவருக்கும் அதனை பரிமாறவும் ஏற்பாடு செய்தார். இதுவரை விஜய் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியதே இல்லை என்பதால் அவருக்கு மட்டுமல்ல அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் இது சவாலான நிகழ்ச்சியாகவே மாறியது.
இறுதியில் இந்த நிகழ்ச்சி 13 நேரம் நீடித்ததால் நொந்து நூடுல்ஸ் ஆன விஜய், இதனை சரியாக திட்டமிடல் உடன் ஏற்பாடு செய்யத் தவறிய நிர்வாகிகளுக்கு டோஸ் விட்டதாகவும் கூறப்படுகிறது. இனி வரும் ஆண்டுகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும் நடத்தினால் தான் சரியாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!