தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படும் நடிகர் சூர்யாவின் இல்லத்திற்கு கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக அரச செலவில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
2021 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம். இந்தப்படத்தில் ஜாதி வெறியை தூண்டும் விதமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளது என கூறி அரசியல் கட்சி ஒன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஜெய் பீம் படத்தின் பிரச்சினை முடிவுக்கு வந்தாலும் சூர்யா வீட்டுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு இன்று வரை தொடர்ந்து வருகின்றது. அதில் ஆயுதமேந்திய நான்கு போலீசார் தினமும் சூர்யா வீட்டில் பாதுகாப்பில் இடப்பட்டு வருகின்றார்கள்.
நடிகர் சூர்யாவின் குடும்பம் தற்போது மும்பைக்கு குடியேறி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அவரின் சென்னை வீட்டிற்கு தொடர்ந்தும் பாதுகாப்பு எதற்காக என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இந்த நிலையில், சமூக ஆர்வலரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினால் நடிகர் சூர்யா வீட்டிற்கு தற்போதும் எதற்காக போலீஸ் பாதுகாப்பு தொடர்கின்றது, யாருடைய உத்தரவின் கீழ் தொடர்கின்றது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு, போலீஸ் கமிஷனர் உத்திரவின்படி கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி சூர்யா வீட்டிற்கு தற்கால பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும், தற்போதும் தொடர் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக பாதுகாப்பு மறு ஆய்வு குழு தீர்மானத்தின்படி அவர்களுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக பதில் கிடைத்துள்ளது.
இதேவேளை, குறித்த சேவையை வழங்கும் காவல்துறைக்கு சூர்யா கட்டணம் கட்டுகின்றாரா என்ற கேள்விக்கு, இல்லை எனவும் பதில் கிடைத்துள்ளது. இதனால் அரச செலவில் ஓசியாக சூர்யா வீட்டுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதில் எந்த நியாயமும் இல்லை என சமூக ஆர்வலர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!