வணக்கம் சென்னை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ஃபீல் குட் மூவி என்ற விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படத்தை இயக்கியிருந்தார். கடந்தாண்டு பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ்ஸையும் இயக்கியிருந்தார்.
இந்நிலையில், தற்போது யார் இந்த பேய்கள் என்ற தலைப்பில் மியூசிக் ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார் .குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு பாடலாக 'யார் இந்த பேய்கள்' ஆல்பம் உருவாகியுள்ளது. இளையராஜா இசையில் யுவன் பாடியுள்ள இந்தப் பாடலுக்கான வரிகளை பா விஜய் எழுதியுள்ளார்.
பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு குழந்தையிடம் பெற்றோர் மனம் விட்டு பேசவும் ஆதரிக்கவும் தவறினால், அதனால் ஏற்படும் மனச்சோர்வு அந்த குழந்தையை கடுமையாக பாதிக்கும் என்பதே யார் இந்த பேய்கள் பாடலின் மையக்கருவாக உள்ளது. குடும்ப உறவினர்கள், நட்பு வட்டத்தில் இருப்பவர்கள், பள்ளிகளில், பொது இடங்களில் என எங்கு வேண்டுமானாலும் குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற வாய்ப்புள்ளன. அதனால், குழந்தைகள் எதேனும் கூறினால், அதன் உண்மை என்னவென்பதை பெற்றோர் தான் கண்டறிய வேண்டும் என வலியுறுத்துக்கிறது இந்தப் பாடல்.
இந்நிலையில், இதுகுறித்து டுவிட் செய்துள்ள கிருத்திகா, உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் காட்ட வேண்டிய பாடல் இது. பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்கள் பற்றி சங்கடமாக உணராமல், அதனை குழந்தைகளோடு விவாதிக்கலாம் என்பதே இந்தப் பாடலின் நோக்கம். குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதும், பாதுகாப்பற்றதாக உணர்ந்தால் பெரியவர்களிடம் கூறுவதையும் கேட்க வேண்டும் என டுவிட் செய்துள்ளார். கிருத்திகா உதயநிதியின் இந்த டுவிட்டர் பதிவு இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
Listen News!