ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுமே தற்போது எதிர்பார்த்து இருப்பது நடிகர் விஜய்யின் 'லியோ' படத்தினைத்தான். இப்படமானது அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு லியோ படத்தினுடைய இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வந்திருந்தன. ஆனால் குறித்த இசை வெளியீட்டு விழாவிற்காக ஆசையோடு காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று முன்தினம் இடி விழுந்தது போல் ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
அதாவது அதிகளவில் பாஸ் கேட்டு அழைப்புகள் வருவதாலும், பாதுகாப்பு கருதியும் லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக கூறப்பட்டது. மேலும் லியோ டிக்கெட்டுகளை சிலர் போலியாக அச்சடித்து அதனை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். குறிப்பாக 10 ஆயிரம் போலி டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
எனவே ரகுமான் இசைக்கச்சேரியில் நடந்த குளறுபடிகள் இங்கும் இடம்பெறக்கூடாது என்பதை நோக்காக கொண்டு இசை வெளியீட்டு விழாவை நிராகரித்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்திற்குள்ளாகினர். இதனையடுத்து பலத்த எதிர்ப்பினையும் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில், செங்கல்பட்டு நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இரண்டு போஸ்டர்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அதில் ஒரு போஸ்டரில் "ஆடியோ லாஞ்ச் இல்லைனா என்ன ! ஆட்சிய புடிச்சுட்டா போச்சி என்ன நண்பா என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மற்றோரு போஸ்டரில் "இளைஞர் அணி, தொண்டரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, மாணவரணி, விவசாய அணி உள்ளிட்ட அணிகள் தயார் நிலையில் உள்ளது , அண்ணா உங்களுடைய அதிரடி அறிவிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர்களின் வாயிலாக விஜய் அரசியலுக்கு வருகின்றமை உறுதியான தகவல் தான் என்பது தெளிவாகிறது. இருப்பினும் என்ன நடக்கிறது என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!