• Nov 14 2024

சொந்த மகனுக்காக கட்டிய மருத்துவமனையில்... இலவச சிகிச்சை அளிக்கும் நெப்போலியன்.. அந்த மனசு தான் சார் கடவுள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் நெப்போலியன். சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவைத் தாண்டி அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். அந்தவகையில் திமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கின்றார்.


பின்னர் தன் மகனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைபாடு காரணமாக அரசியலை விட்டும் விலகிய நெப்போலியன், தற்போது குடும்பத்துடன் அமெரிக்கா சென்று அங்கு செட்டில் ஆகிவிட்டார். அதுமட்டுமல்லாது அமெரிக்காவில் சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர், அதேநேரத்தில் விவசாயமும் செய்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் நெப்போலியன் தனது மகன் பாதிக்கப்பட்டுள்ள அரியவகை நோய் குறித்தும், இதற்காக உலக தரத்தில் தான் கட்டிய மருத்துவமனை குறித்தும் மனம் திறந்து பேசி இருந்தார். 


அதாவது நெப்போலியனின் மகன் தனுஷ் என்பவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 4 வயது இருக்கும்போதே இந்த நோயை உடலில் கண்டுபிடித்துவிட்டார்களாம். ஆனால் அவர் 10 வயதுக்கு மேல் நடக்கமாட்டார் என மருத்துவர்கள் சொன்னார்களாம். அவர்கள் சொன்னபடியே 10 வயதுக்கு மேல் ஆனதும் தனுஷால் நடக்க முடியாமல் போனதாம்.

இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் தேடியும் இந்த நோயை குணப்படுத்த மருந்து எதுவும் கிடைக்கவில்லையாம். இதையடுத்து பாரம்பரிய வைத்தியம் மூலம் இதனை படிப்படியாக குணப்படுத்த முடியும் என ஒரு சிலர் சொன்னதும், திருநெல்வேலி அருகில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் ஒருவர் இதற்காக பாரம்பரிய வைத்தியம் செய்து வருவதை அறிந்து அந்த இடத்திற்கு தனது மகனை அழைத்து சென்றாராம் நெப்போலியன்.


ஆனால் அங்கு அவர்கள் நன்றாக சிகிச்சை அளித்தாலும் தங்குவதற்கு போதிய இட வசதி இல்லாததன் காரணமாக ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து அவருடைய மகனுக்கு அங்கேயே சிகிச்சை கொடுத்து வந்துள்ளார் நடிகர் நெப்போலியன். அந்த சமயத்தில் நெப்போலியன் மத்திய அமைச்சராக இருந்ததன் காரணமாக இந்த செய்தி மீடியாக்களில் வெளியாகி பயங்கர வைரலானது.

இதனைத் தொடர்ந்து இதுபோல் குறைபாடுள்ள குழந்தைகளை அழைத்துக்கொண்டு இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமானோர் திருநெல்வேலிக்கு படையெடுத்துள்ளனர். இத்தனை பேர் வந்தாலும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இடவசதி அங்கு இல்லாமல் இருந்தது. இதனைப் பார்த்ததும் உடனே அங்கு மருத்துவமனை ஒன்றை கட்டிக்கொடுத்துள்ளார் நெப்போலியன். 


அந்த மருத்துவமனையை தமிழகத்தின் தற்போதைய முதல்வராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தான் திறந்து வைத்தாராம். மேலும் கடந்த 12 ஆண்டுகளாக நெப்போலியன் அந்த மருத்துவமனையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்மருத்துவமனையின் மகிமை அறிந்து இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் அங்கு சிகிச்சைக்காக வருகிறார்களாம். 

தன்னுடைய மகனுக்கு கிடைத்த இந்த நல்ல உயர்தர சிகிச்சை ஏழை குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நல் எண்ணத்தோடு தான் தற்போது இந்த மருத்துவமனையை நடத்தி வருகிறார் நெப்போலியன். இங்கு வரும் மக்களிடம் சிகிச்சைக்காக பணம் எதுவும் வாங்கப்படுவதில்லையாம். இதன் காரணமாக அவர் தன்னுடைய மகனுக்கு மட்டுமின்றி அங்கு சிகிச்சைக்காக வரும் எல்லா குழந்தைகளுக்கும் தந்தையாக திகழ்ந்து வருகிறார்.

Advertisement

Advertisement