நடிகர் தனுஷ் நடிப்பில், தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வாத்தி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவான இந்தத் திரைப்படத்தை, பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்திருந்தது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். தனுஷுடன், சம்யுக்தா, சமுத்திரக்கனி, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், 118 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கில் தனுஷின் முதல் நேரடிப் படமான இந்தப் படம், அவரின் முந்தையப் படமான ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை விட விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
அதன்படி, தமிழில் 41.05 கோடி ரூபாய் வசூலித்துள்ள நிலையில், அதற்கும் மேலாகவே தெலுங்கில் 41.75 கோடி ரூபாய் ‘வாத்தி’ திரைப்படம் வசூலித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 8 கோடி ரூபாயும், உலக அளவில் 24 கோடி ரூபாயும் ‘வாத்தி’ படம் வசூலித்துள்ளது.
‘திருச்சிற்றம்பலம்’ படத்தை அடுத்து ‘வாத்தி’ திரைப்படம் தனுஷ் கேரியரில் அதிக வசூலை ஈட்டியப் படம் என்ற பெருமையையும் ‘வாத்தி’ படத்திற்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!