மலையாள திரையுலகில் பல படங்களிலும் பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விநாயகன். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாது தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். உதாரணமாக திமிரு, மரியான், சிறுத்தை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இவர் குறித்த சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. விமானத்தில் சகபயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர் இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக காத்திருந்த சக பயணி ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து விநாயகன் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் கோவா விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் ஏறக் காத்திருந்தபோது நடிகர் விநாயகனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக் அந்த பயணி கூறி இருக்கின்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில் "விமானத்தில் ஏறுவதற்காக காத்திருக்கும் போது ஒரு வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதே விமானத்தில் ஏறிய நடிகர் விநாயகன், தன்னை வீடியோ எடுத்தாக குற்றம் சாட்டி தன்னை துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கியதாகவும், தான் எந்த வீடியோவையும் எடுக்கவில்லை என்றும், விருப்பப்பட்டால் தனது போனை அவர்கள் சோதனை செய்யலாம்" எனவும் அவரிடம் தான் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் விநாயகன் தொடர்ந்து தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக மனுதாரர் கூறி உள்ளார். இதனையடுத்து விமான நிறுவனத்தை அணுகியதாகவும் ஆனால் அவர்களிடமிருந்து சரியான பதில் தனக்கு கிடைக்கவில்லை என்றும், பின்னர் ஏர்சேவா போர்டல் மூலம் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் துணைச் செயலரிடம் புகார் அளித்ததாகவும் குறித்த மனுதாரர் அப்புகாரில் தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், குறித்த மனுவில் விநாயகனை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
Listen News!