இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்தவர் சோனு சூட். இவர் நடிகர் மட்டுமல்லாது சிறந்த கொடை வள்ளலாகவும் திகழ்ந்து வருகின்றார். அதாவது கொரோனா காலத்தில் நிவாரண பொருட்கள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்பட பல்வேறு உதவிகளை மக்களுக்கு சோனு சூட் வழங்கி இருந்தார்.
இந்நிலையில், அசாம் மாநிலம் கொக்ராஜ்ஹர் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சோனு சூட் பங்கேற்றிருந்தார். அதில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்திருக்கின்றார். அந்தவகையில் நிகழ்ச்சியில் சோனு சூட் கூறியதாவது "நான் ஆங்கிலம், சீனா, மராத்தி, கன்னடா, தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 100 படங்களில் நடித்துள்ளேன். அந்த படங்கள் அனைத்தும் வெற்றியடைந்தன. ஆனால், கொரோனா வைரஸ் தாக்கியபோது பொதுமக்களுடன் இணைய எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
அந்த மக்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதற்கு முன் அந்த மக்களை நான் சந்தித்தது கூட இல்லை. அவர்களை நான் மீண்டும் சந்திக்கப்போவதுமில்லை. அந்த சமயத்தில் தான் அவர்களின் வாழ்க்கைக்கு தெரிந்தோ தெரியாமலோ நான் மகிழ்ச்சியை கொண்டுவந்தேன். அதற்கு பதிலாக அவர்களிடமிருந்து நிறைய ஆசிர்வாதம் பெற்றேன்.
இதன் மூலம் கிடைக்கும் வெற்றி எவ்வாறு இருக்கும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். மக்களுக்கு உதவுவதே எனக்கு அதிக திருப்தி அளிக்கிறது. நான் திரைத்துறையில் கடந்த 20 ஆண்டுகள் பணியாற்றி வருகிறேன். 500 - 1000 கோடி ரூபாய் திரைப்படத்தில் நடிக்கலாம். ஆனால், ஒரு நபரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை விட படத்தின் மூலம் கிடைக்கும் கோடி ரூபாய் பெரிதல்ல" எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு மக்களுக்கு உதவுவதை பெரிதாக எண்ணும் நடிகர் சோனு சூட்டின் நல்ல மனதை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
Listen News!