மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி.லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியுள்ளனர். இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மார்ச் மாதமே தொடங்கப்பட வேண்டியது.
ஆனால், விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்குநராக கமிட்டானதால் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், பல மாதங்களுக்குப் பின்னர் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியுள்ளது.
மகிழ் திருமேனி தனது டீமுடன் அசுர வேகத்தில் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் போல குறைந்த நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க மகிழ் திருமேனி முடிவு செய்துள்ளாராம். இந்நிலையில் படத்திலிருந்து ஹுமா குரோஷி நீக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு பதிலாக, ரெஜினா கசாண்ட்ரா இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்த ஹுமா குரேஷி, தற்போது விடாமுயற்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனிடையே, நாயகி மாற்றம் மட்டுமில்லாமல் லொகேஷனையும் தற்போது விடாமுயற்சி டீம் மாற்றியுள்ளது. அஜர்பைஜானில் நடக்கவிருந்த இந்தப் படத்தின் சூட்டிங், அதன் தலைநகரான பாகுவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
அஜர்பைஜானில் தற்போது வகுப்புவாத மோதல் ஒன்று நடந்துவருவதால், அதனிடையே சூட்டிங்கை நடத்துவதால் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதை கருத்தில் கொண்டு, படக்குழுவினர் இந்த லொகேஷன் மாற்றத்தை செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த மோதல் நின்றால் மீண்டும் அஜர்பைஜானுக்கு படக்குழுவினர் திரும்புவார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த சூட்டிங்கை முடித்துக்கொண்டு, அடுத்தக்கட்டமாக துபாயில் பாலைவனப்பகுதியில் முக்கியமான ஃபைட் சீன் ஒன்றையும் எடுக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இரு இடங்களில் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, சென்னையில் சில தினங்கள் சூட்டிங் நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!