ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் ஷங்கர், அடுத்தடுத்து காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, 2.O என பிரம்மாண்டமான படங்களை இயக்கி ரசிகர்களை தன் வசம் வைத்துக்கொண்டார்.
படத்தில் கதையே இல்லையென்றாலும் அதை படமாக்குவதிலும், அந்தப் படத்தில் இடம்பெறும் பாடல் காட்சிகளிலும் பிரம்மாண்டத்தை கொட்டித் தீர்த்து, ரசிகர்களை பார்க்க வைத்துவிடுவார். இதனாலேயே அவருக்கு பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயர் வந்தது.
இந்நிலையில், கமலுடன் 'இந்தியன் 2' படத்தை ஆரம்பித்தார் ஷங்கர். ஆனால், இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் 3 உதவி இயக்குநர்கள் உயிரிழக்க படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அத்தோடு பட்ஜெட்டையும் குறைக்க வேண்டுமென, லைக்கா நிறுவனம் ஷங்கரிடம் வலியுறுத்த, சிக்கல்கள் இன்னும் அதிகமாகின. இதனால் இந்தியன் 2 சூட்டிங் கிடப்பில் கிடக்க, தற்போது மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்தியன் 2 ஷூட்டிங் நிறுத்தப்பட்டதால், இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் அந்நியன் படத்தின் ரீமேக்கை எடுக்க திட்டமிட்டார் ஷங்கர். ஆனால், கதை உரிமை விவகாரத்தில் 'அந்நியன்' பட தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் ஷங்கருக்கும் இடையில் பிரச்சினை எழுந்தது. அத்தோடு அந்நியன் இந்தி ரீமேக் திட்டம் அப்படியே கைவிடப்பட்டது.
இதனால், தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க கமிட் ஆனார் ஷங்கர். எனினும் தற்காலிகமாக RC 15 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, தில் ராஜூ தயாரித்து வருகிறார். மேலும் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக படத்தில் இரண்டு கலை இயக்குநர்கள் மாறிவிட்டதாகவும், தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த சுரேந்தர் ரெட்டி என்பவரும் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.
அத்தோடு ஒரு பாடலுக்கு ரஷ்யாவில் இருந்து 100 ரஷ்ய பெண்களை இறக்குமதி செய்த ஷங்கர், அதுக்காக மட்டுமே 7 கோடி ரூபாய் வரை செலவு செய்ததாகவும், இதனால், தில் ராஜூ கடுப்பானதாகவும் தெரிகிறது. அதேபோல், கல்லூரி செட் அமைத்து படமாக்க வேண்டும் என்று ஷங்கர் கேட்டதாகவும், அதற்கு உண்மையான கல்லூரியிலேயே படமாக்கலாம் என தில் ராஜூ கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஷங்கர் கல்லூரியை செட் அமைத்து படமாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திட்டமிட்ட பட்ஜெட்டைவிட ஏற்கனவே அதிகம் செலவாகி விட்டதால் தில் ராஜு இன்னும் கல்லூரி செட் அமைக்க ஓக்கே சொல்லவில்லை என தெரிகிறது. எனினும் இதனிடையே தெலுங்கு திரையுலகில் வேலை நிறுத்தமும் தொடங்கியது. மேலும், ஷங்கர் தற்போது இந்தியன்-2 படத்தை தொடங்கவுள்ளார். இந்தப் படம் முடித்த பின்னர் தான் 'RC 15' வேலைகள் தொடங்கும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகின்றன.
அத்தோடு ராஜமெளலி இயக்கத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் மாஸ் காட்டிய ராம் சரண், இப்போது ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருவதால் உற்சாகத்தில் இருந்தார். ஆனால், ஷங்கர் - தில் ராஜூ இடையேயான பிரச்சினையால் இப்போது ராம் சரண் கலக்கத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் கடந்த சில வருடங்களாகவே இயக்குநர் ஷங்கர் பட்ஜெட் தொடர்பான சர்ச்சைகளில் சிக்கி வருவது, அவரது ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!