• Nov 10 2024

அடி வாங்கினவன் இப்போதான் பேசுறான் அமைதியா இருங்க- ரசிகரின் கேள்விக்கு பொங்கி எழுந்த அமீர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும், ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்பதுபோலவும் திரைப்படங்கள் அதிகம் வர ஆரம்பித்ததற்கு விதை போட்டது பா.இரஞ்சித். அட்டக்கத்தியில் ஆரம்பித்த அவரது பயணம் மெட்ராஸ் படத்தில் உச்சம் சென்றது. அந்தப் படத்தில் பல காட்சிகள் ஆதிக்கவர்க்கத்தினரை ஒடுக்கப்பட்டவர்கள் கேள்வி கேட்பதுபோல் இருக்கும். அந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது. அதன் பிறகு அவர் இயக்கிய காலா, கபாலி உள்ளிட்ட படங்களும் அதே ஜானரில் வந்தன.

அவர் இவ்வாறு படம் எடுக்க ஆரம்பித்ததை அடுத்து பல படைப்பாளிகள் ஒடுக்கப்பட்டவர்களுக்காக படம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படி மாரி செல்வராஜும் ஒருவர். அவர் முதலில் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தில் ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்டவர்களை எவ்வாறு கீழ்த்தனமாக நடத்துகின்றனர் பட்டவர்த்தனமாக பேசியிருப்பார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகி மாரி செல்வராஜை முக்கியமான இயக்குநராக அடையாளப்படுத்தியது. இதனையடுத்து அவர் இயக்கிய கர்ணன் படமும் இதே ஜானரில் வந்து வரவேற்பைப் பெற்றது.


இப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை பேசும்படி படங்கள் வருவது அதிகரித்திருப்பதை ஒருதரப்பினர் பலமாகவே வரவேற்கின்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர் வேண்டுமென்றே சாதியை மையமாக வைத்து படங்கள் இயக்கப்படுவது தேவையற்ற ஒன்று. இது மற்றவர்களையும் தூண்டிவிடும் என கூறிவருகின்றனர். இந்தச் சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமீரிடம் ரசிகர் ஒருவர், 'கமர்ஷியல் படங்களாக இருந்தாலும் சரி, சமூக அக்கறையுள்ள படங்களாக இருந்தாலும் சரி; சாதியுடன் இணைக்கப்பட்டு வருகின்றனவே' என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த இயக்குநர் அமீர், "இந்தக் கேள்வி சமீபகாலமாக அதிகம் வந்துகொண்டே இருக்கிறது. அப்போ சாதி நமக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. அதேபோல் நீண்ட நெடிய காலமாக சாதி திரைப்படங்கலை பார்த்துக்கொண்டே இருக்கோம். தேவர்மகன், சின்னக்கவுண்டர் போன்ற படங்கள் வந்தபோது எதற்காக சாதி பெயரை படத்தின் தலைப்பில் வைத்தீர்கள் என யாருமே கேட்கவில்லை. அதை திரைப்படமாக பார்த்து சந்தோஷமாக கொண்டாடிவிட்டோம்.


திரைப்படங்களின் மூலமாக ஆதிக்க சாதியின் மனப்பான்மை நமக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. வேலை பார்க்கும் இடம், சமூகம், கல்வி நிறுவனங்கள் என எங்கேயும் தனக்கான அடையாளம் கிடைக்காமல் போராடி போராடி இலக்கியத்திலும், தமிழ் சினிமாவிலும் ஒடுக்கப்பட்ட சமூகம் வெடித்துக்கொண்டு வெளியே வருகிறது. பா.இரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் தான் பட்ட வலியை , கொடுமையை, தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை படமாக எடுத்து பேச ஆரம்பித்தவுடன் இது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. அடி வாங்குனவன் இப்போதான் பேசுறான். இவ்வளவு நாள் அடிச்சவன் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டுதான் இருந்தான். அடி வாங்கியவன் பேச ஆரம்பித்த பிறகு என்ன இது சாதி படமாக வருகிறது என கூறுகிறார்கள்.


அது சாதிய ரீதியான படம் கிடையாது. இவ்வளவு நாள்கள் அடி வாங்கியவர்கள் இதுவரை தாங்கள் மறைத்து வைத்திருந்த வலியை திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள் என்றுதான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என கூறினார். அவரது இந்த பதிலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடிவருகின்றனர்.


Advertisement

Advertisement