பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஷாருக்கான். அதேபோல் இவரின் மனைவியான கவுரி கான் பாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக உள்ளார். அதுமட்டுமல்லாது பிரபல ஆடை வடிவமைப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் ஷாருக்கானின் மனைவி தற்போது சட்ட சிக்கல் ஒன்றில் சிக்கியிருக்கிறார். அதாவது இவரின் மீது மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஷாருக்கானின் மனைவி மீது இந்திய தண்டனைச் சட்டம் 409 என்ற பிரிவின் கீழ் போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
அந்தவகையில் கவுரி கான் மீது புகார் அளித்த தொழிலதிபர் ஜஸ்வந்த் ஷா கூறுகையில் லக்னோவில் துல்சியானி கட்டுமான நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்குவதற்காக முற்பணமாக ரூபாய் 86 லட்சம் கொடுத்து இருந்தார் என்றும் ஆனால் அவருக்கு அந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் இன்றுவரை பிளாட்டை வழங்காமல் பணத்தையும் ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஜஸ்வந்த் ஷா, பிளாட் வாங்குவதற்காக முற்பணம் கொடுத்த நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடர் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தான் என்றும் இந்த பிளாட்டை வாங்குவதற்கு அவர் விளம்பரப்படுத்தியதால் தான் அந்த பிளாட்டை தான் வாங்க முடிவு செய்து பணம் கொடுத்ததாகவும் தனது புகார் மனுவில் அவர் கூறியிருக்கிறார்.
அத்தோடு லக்னோவின் சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் உள்ள துளசியானி கோல்ஃப் வியூவில் இந்த பிளாட் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜஸ்வந்த் ஷா புகாரின் அடிப்படையில் துல்சியானி கட்டுமான நிறுவனம் மற்றும் அதன் தலைமை எம்டி அனில் குமார், இயக்குநர் மகேஷ் துல்சியானி ஆகியோர் மீதும் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
ஆனால் இதுகுறித்து ஷாருக்கானின் மனைவி கவுரி கானோ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனமோ இதுவரை அதிகாரபூர்வமாக எந்த பதிலும் கூறவில்லை. இவ்வாறு பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் மனைவி மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!