இயக்குநர் துல்கர் சல்மான் இராணுவ வீரராக நடித்து கடந்த ஆகஸ்ட் 5ம் திகதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் தான் சீதா ராமம்.இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் வெற்றியினைக் கொண்டாடும் விதமாக அண்மையில் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இவ் வெற்றி விழாவில் பேசிய துல்கர் சல்மான கூறியதாவது '’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை போலவே வித்தியாசமாக உருவான 'சீதா ராமம்' படத்திற்கும் ஆதரவு அளித்த தமிழ் ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
'சீதா ராமம்' என்ற படமே ஒரு கனவு போன்றது. இயக்குநர் கதை சொல்லும்போதே இது ஒரு காவிய காதல் கதை என்பது மட்டும் புரிந்தது. இதற்கு முன் கேட்காத காதல் கதையாகவும் இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு போர் போல நடைபெற்றது. இயக்குநர் என்ன சொன்னாரோ அதனை ஒட்டுமொத்த படக்குழுவினரும் மறுப்பே சொல்லாமல் செய்துகொடுத்தோம்.என்னுடைய ராம் கதாபாத்திரம் வாழ்க்கையில் மறக்க முடியாத கதாபாத்திரம். இந்தப் படத்தை நான்கைந்து முறை பார்த்து விட்டேன். 'சீதா ராமம்' படத்தை திரையரங்கில் பார்ப்பதில்தான் சிறந்த அனுபவம் கிடைக்கும் என்பதையும் உணர்ந்தேன்.
இயக்குநரிடம் கதை கேட்கும்போதுகூட, கடிதம் எழுதும் பழக்கம் தற்போது பெரியளவில் இல்லையே, எப்படி வரவேற்பு கிடைக்கும் என்று யோசித்தேன். ஆனால் இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஏராளமானவர்கள் மீண்டும் கடிதம் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள். வெளியீட்டிற்கு முன்னர் இந்த படத்தை எப்படி விளம்பரப்படுத்துவது என்று தெரியவில்லை. ஆனால் படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரப்படுத்தி இருக்கலாமே என தற்போது நினைக்கிறோம். இருப்பினும், படத்தை பெரிய அளவில் வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!