சினிமாவைப் பின்புலமாக கொண்ட குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தன்னுடைய தனித் திறமையினால் நடிப்புத் துறையிலே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் சினிமாவில் எதிர்நீச்சல் போட்டு வரும் நடிகர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருந்து வருகின்றார்.
வாரிசு நடிகரான இவர் 'பருத்திவீரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவரின் நடிப்பில் சமீபத்தில் 'விருமன்' படம் வெளியாகி இருந்தது.
வெளியான நாள் முதலே இப்படமானது நேர்மறையான விமர்சனங்களை பெற்று வந்தது. இதில் கதாநாயகியாக அதிதி சங்கர் அறிமுகமாகி இருந்தார்.
மேலும் தற்போது மணிரத்தினத்தின் கனவுப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்திலும் வந்தியதேவனாக நடித்திருக்கின்றார். இப்படமானது வரும் செப்டம்பர் 30-ஆம் வெளியாக இருக்கின்றது. காவிய நாடகத்தை மையமாக கொண்டமைந்த இப்படத்தில் ஜெயம் ரவி, பிரபு, விக்ரம் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாது பி.எஸ் .மித்ரன் இயக்கத்தில் உருவான 'சர்தார்' படத்திலும் நடித்து முடித்துள்ளார் கார்த்தி. இந்த படமும் நீண்ட கால காத்திருப்பதற்குப் பிறகு தற்போது வெளியாக உள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிக்கிறார். இப்படமானது இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கார்த்தியின் அடுத்த படத்தினுடைய திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. அதாவது இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகும் படத்திலேயே நடிக்க கார்த்தி ஒப்பந்தமாகியுள்ளார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
மேலும் இதில் வித்தியாசமான தோற்றத்தில் நாயகனான கார்த்தி காணப்படுவார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக என்றே கார்த்தி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இப்புதிய படத்தின் டைட்டில் குறித்த செய்தி ஒன்று சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது. அதாவது கார்த்தியின் அடுத்த படத்திற்கு 'ஜப்பான்' என்று பெயரிடப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
அத்தோடு இந்தப் படத்தில் முன்னர் விஜய் சேதுபதி இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அவர் மறுத்துவிட்ட காரணத்தால் டோலிவுட் நடிகர் சுனில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என பேச்சுக்கள் அடிபடுகின்றன.
ஆயினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மேலும் அடுத்த மாதம் படப்பிடிப்புக்கு வரும் இந்த படத்திற்கான முன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
Listen News!