தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் அடுத்தடுத்து பல தொடர் மரணங்கள் இடம்பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன. அதிலும் அதிகளவில் நகைச்சுவை நடிகர்கள் மரணத்தால் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
அதாவது டிபி கஜேந்திரன், மயில்சாமி மற்றும் மனோபாலா ஆகியோர் இந்த ஆண்டு மரணமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் மூவருக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கலந்து ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கார்த்தி பேசுகையில் "இவங்க மூவருமே பேசுவதற்கு முன்னாடி, அவர்களை பார்த்தாலே சிரிப்பு வரும். அந்த அளவுக்கு மக்களை மகிழ்வித்தவர்கள். டிபி கஜேந்திரன் எப்பவுமே சந்தோஷமா இருப்பாரு, நடிகர் சங்கத்திற்கும் பக்கபலமாக இருந்தார். எப்போதுமே பாசிடிவாக இருக்குறவரு. பெரிய ஆளுமை உள்ள மனுஷன் " எனக் கூறியிருந்தார்.
அடுத்து மயில்சாமி பற்றி அவர் கூறுகையில் "மயில்சாமி, எனக்கு சிறுத்தை படத்திலிருந்து பழக்கம். தனக்கு மிஞ்சியது தான் தானம்னு சொல்வாங்க. ஆனால் தானத்துக்கு மிஞ்சியது தான் தனக்கு என வாழ்ந்தவர் அவர். கடன் வாங்கி தானம் பண்ணினார். சென்னை பெரு வெள்ளம் ஏற்பட்ட சமயத்தில் அவரிடம் இருந்த செயின், மோதிரத்தை விற்று நிறைய பேருக்கு உணவளித்தார். யாருக்காகவும் உதவி கேட்க அவர் தயங்கவே மாட்டார். எம்.ஜி.ஆரின் தீவிர தொண்டனாக இருந்து. அவரைப்போலவே வாழ்ந்தவர். அவரது இழப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" எனவும் மிகவும் உருக்கமாக தெரிவித்திருந்தார்.
மேலும் மனோபாலா பற்றிப் பேசுகையில் "எல்லாரையும் சிரிக்க வைக்கும் குணம் கொண்டவர். நடிகர் சங்கத்தில் ஏதேனும் பெரிய விழா நடத்தினால் அவர் பொறுப்பாக முன்னெடுத்து அதனை நடத்துவார். அதேபோல் ஏதாவது பிரச்சனை வந்தாலோ, வாக்குவாதம் நடந்தாலோ சமாதானப்படுத்த முதல் ஆளாய் மனோபாலா வருவார். ஈகோ இல்லாத மனிதன் அவர், வயசு வித்தியாசம் பார்க்காமல் எல்லாருடனும் ஈஸியா பழகக்கூடிய மனிதர் அவர். இவர்கள் மூவரையும் இழந்தது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக உள்ளது" எனவும் மிகவும் உருக்கமாக அந்த நிகழ்வில் கார்த்தி கூறியிருந்தார்.
Listen News!