ஒய்.ஜி மகேந்திரன் தயாரிக்கும் சாருகேசி படத்தின் அறிவிப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியிருந்தார். அதில் தனது மனைவியை அறிமுகப்படுத்தி வைத்த ஒய்.ஜி மகேந்திரனுக்கு நன்றி சொன்னதோடு சாருகேசி நாடகம் குறித்தும் பெருமையாக பேசினார்.
மேலும், இளமை காலத்தில் மது, சிகரெட், சாப்பாடு என ஜாலியாக பொழுதை கழித்த நினைவுகளையும் வரிசைப்படுத்தினார். அதன் பின்னர் பேசிய ஒய் ஜி மகேந்திரன், ரஜினி குறித்த சில நெகிழ்வான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு பட்டம் கொடுக்க நினைக்கிறேன், அது ஒரேயொரு சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் தான் எனக் கூறினார்.
ஒரேயொரு மக்கள் திலகம், ஒரேயோரு நடிகர் திலகம், ஒரேயொரு மெல்லிசை மன்னர், ஒரேயொரு கவி கண்ணதாசன் போல ஒரேயொரு ரஜினிகாந்த் தான், அவர் தான் ஒரேயொரு சூப்பர் ஸ்டார் என ஒய்ஜி மகேந்திரன் பேசினார். மேலும் அவர் ஒரு சிறந்த மனிதநேயம் மிக்கவர் என்றும், இந்த விழாவுக்காக அவரை போனில் தான் அழைத்தேன். நேரில் வரவேண்டாம் கண்டிப்பா நிகழ்ச்சிக்கு வந்துவிடுவேன் என இதோ வந்துவிட்டார் ரஜினி, அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்றார் ஒய்ஜி மகேந்திரன். இப்படி ஒரு நல்ல மனிதத்தன்மை தான் ரஜினியை சூப்பர் ஸ்டாராக நிற்க வைத்துள்ளது. அந்த இடம் வேறு யாருக்கும் கிடையாது என ஆணித்தரமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இப்போ நிறைய வாரிசு பிரச்சினை வந்துட்டு இருக்குது எனக் கூறினார். அப்போது ரசிகர்கள் விசிலடிக்கவும், நான் வாரிசு படத்தை பற்றி பேசவில்லை, என்னை வம்புல மாட்டிவிடாதீங்க, இது வேறு வாரிசு பிரச்சினை என்றார். மேலும், நான் சொல்ல வந்தது அடுத்த தலைமுறையில் இருந்து வாரிசு வருகிறார்கள், அவர்கள் திறமையானவர்களாக இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்றார். வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சரத்குமார் பேசியது வைரலானது. இதனை நேரடியாக குறிப்பிடாமல் ஒய்ஜி மகேந்திரன் பேசியது குறிப்பிடத்தக்கது.
Listen News!