வட கொரியாவில் சர்வாதிகார ஆட்சி இடம்பெற்று வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்நாட்டின் உடைய ஆட்சி முறையானது மற்ற நாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது. அங்கு ஊடகங்கள் உள்பட அனைத்து விடயங்களுமே அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளது.
இதனால் அங்கு பல வினோதமான சட்டங்களும் அவ்வப்போது நிறைவேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதும் அவ்வாறான ஒரு சட்டத்தை கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு நிறைவேற்றி இருக்கிறது.
அதாவது வடகொரியாவில் உள்ள குழந்தைகள் ஹாலிவுட் அல்லது தென்கொரிய படங்களை பார்ப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதையும் மீறி படம் பார்க்கும் குழந்தைகள் 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்கிற கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்தோடு அந்த குழந்தைகளின் பெற்றோரும் 6 மாத காலம் வரை தொழிலாளர் முகாம்களில் அடைக்கடுவார்கள் என எச்சரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்னர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையான எச்சரிக்கப்பட்டு அதன் பின்னர் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் தற்போது யாருக்குமே அந்தக் கருணை காட்டப்படமாட்டாது என திட்டவட்டமாக கூறி இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.
அதுமட்டுமல்லாது இதனைக் கண்காணிக்க வடகொரிய அரசு தனிக் குழுக்களையும் அமைத்து இருக்கிறது. மேலும் மேற்கத்திய ஊடகங்களின் ஊடுருவலை தடுக்கவே இத்தகைய நடவடிக்கையை கிம் ஜாங் உன் அரசு மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் வடகொரியாவில் திரைப்படங்களுக்கு மட்டுமல்ல நடனமாடுவது, பாடல் பாடுவது உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!