• Sep 20 2024

"இதனால் தான் அந்த வீட்டை விட்டு வெளியே வந்தேன்"…ரகுவரனின் குடும்பம் பற்றிப் பேசிய நடிகை ரோஹிணி

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சுமார் 80 களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சிறிது காலப்பகுதிக்குள்ளேயே மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ரகுவரன். இவரிற்கு தனித்துவமான குரல் மற்றும் உயரமான தோற்றம் என வில்லன் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பு கச்சிதமாக இருந்ததால் ஹீரோவாக நடித்து வந்த ரகுவரன் அதனைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கினார். அதுவும் இவர் வில்லனாக நடித்த வேடங்களில் ரஜினியின் பாட்ஷா படத்தில் இவரது மார்க் ஆண்டனி கதாபாத்திரம் காலம் கடந்தும் இன்று வரை மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுகின்றது.

மேலும் இவர் நடித்த படங்களில் 'சம்சாரம் அது மின்சாரம்', 'மனிதன்', 'ராஜா சின்ன ரோஜா', 'பாட்ஷா', 'மக்கள் என் பக்கம்' உள்ளிட்ட பல படங்கள் இன்றும் நம் நெஞ்சை விட்டு அகலாமல் மனதில் பதிந்துள்ளன. இவ்வாறாக கிட்டத்தட்ட 400 இற்கும் அதிகமான படங்களில் இவர் நடித்திருக்கின்றார். சினிமாவில் எந்தளவிற்கு தன்னுடைய திறமையை நிலை நாட்ட முடியுமோ அந்தளவிற்கு நிலைநாட்டி இருக்கின்றார்.

இவ்வாறாக பல படங்களில் நடித்து வந்த நடிகர் ரகுவரன் நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு திருமணமான இரண்டு வருடங்களில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை பிறந்து ஆறு வருடங்களில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றுப் பிரிந்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து தனியாக வாழ்ந்து வந்த ரகுவரன் 2008-ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த சந்தர்ப்பத்தில் நடிகை ரோகினி தனது கணவனான ரகுவரனை பற்றி சில உருக்கமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஒரு மேடைப் பேச்சில் பெண்களுக்கு எதிராக இருக்கும் சமூகத்தைப் பற்றி பேசியிருந்தார் நடிகை ரோகிணி. அதில் அவர் கூறும் போது "ஒரு பெண் குழந்தை வளரும்போதே கணவர் வீட்டுக்கு சென்றால் இந்த இந்த வேலைகள் செய்யவேண்டும் என சொல்லிக் கொடுத்து வளர்க்கப்படுகிறது. அந்தப் பெண்ணுக்கான சுதந்திரம் எல்லா இடத்திலுமே மறுக்கப்படுகிறது. அதுவும் புகுந்த வீட்டில் நாலு சுவருக்குள் பல போராட்டங்களுக்கு பிறகு அந்தப் பெண் ஏதாவது ஒரு வார்த்தை பேசி விட்டால் அவளுடைய நிலை அவ்வளவுதான்" எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் "அதன்பின்பு அந்தப் பெண்ணின் கேரக்டரை தப்பாக பேசும் உலகம் இது. மேலும் 90 சதவீதமான பெண்களுக்கு இது போன்று பல கொடுமைகள் நடக்கிறது. நானும் இதேமாதிரியானதொரு குடும்ப வன்முறையை சந்தித்து விட்டுத்தான் வந்துள்ளேன். இதற்கு மேலும் என்னால் அந்த வீட்டில் வாழ முடியாது என்ற பிறகே இந்த முடிவு எடுத்து அந்த வீட்டை விட்டு வெளியே வந்துள்ளேன்" என ரோகிணி ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

மேலும் அவர் "அந்த குடும்பத்தில் இருந்து வெளியேறிய பிறகும் இதை வெளியில் சொல்ல எனக்கு இத்தனை காலம் தேவைப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக எந்தக் குறையும் இல்லாமல் வாழ்கின்ற அதாவது பொருளாதார சுதந்திரம் உள்ள நானே இவ்வளவு குடும்ப வன்முறையை அந்த வீட்டில் சந்தித்துள்ளேன். ஆனால் பொருளாதார ரீதியாக சுதந்திரம் இல்லாத சாதாரண பெண்களின் நிலை என்னவாகும்" எனப் பல கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.

மேலும் தனது கணவர் பற்றி அவர் கூறுகையில், ரகுவரன் அதிகமாக மது அருந்தக் கூடியவர் என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் தான் நடிக்கும் கதாபாத்திரங்கள் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் அதற்காக பல விஷயங்களை பயிற்சியெடுத்து செய்யும் ரகுவரன் வீட்டிலும் அதே கதாபாத்திரம் போன்று முரட்டுத்தனமாக நடந்து கொள்வாராம். இவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதால் அதேபோன்று வீட்டிலும் நடந்து கொள்வதால் மிகப்பெரிய பிரச்சினை குடும்பத்தில் எழுந்துள்ளது எனவும் தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறாகத் தற்போது ரகுவரன் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினராலும் தான் பாதிக்கப்பட்டதாக ரோகிணி அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement