நடிகை கயல் ஆனந்தி நடித்துள்ள 'மங்கை' படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட இயக்குநர் லெனின் பாரதி பேசிய சில விடயங்கள் தற்போது வைரலாக உள்ளது.
அதன்படி, குறித்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் லெனின் பாரதி கூறுகையில், இந்த படத்தின் டிரைலர், டைட்டில் டிசைன், போஸ்டர் என்பவற்றை பார்த்தேன்.
பொதுவாக ஆண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி டைட்டில் கம்பீரமாக சித்தரிக்கப்பட்டு இருக்கும். ஆனால் மங்கை படத்தில் டைட்டில் அத்தனை கீறல்கள், உடைப்பு எல்லாமே இருக்கிறது. காலங்காலமாக எல்லா சமூகத்திலும், மதத்திலும் ஒடுக்கப்பட்டவர்களாக பெண்கள் தான் காணப்படுகிறார்கள்.
துக்க வீட்டில் உள்ளே புகுந்து அதை செய்தியாக்கி பரபரப்பை ஏற்படுத்தும் ஊடகத்தின் வெறிபிடித்த வேட்டையும் இந்த படத்தில் இருப்பதாக தெரிகிறது.
அத்துடன் த்ரிஷா விவகாரத்தில், நடிகர்கள் யாரும் எதையும் சொல்லவில்லை, கேட்கவும் முன்வரவில்லை என்கிறார்கள். அவர்கள் எப்படி கேட்பார்கள்?
தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் அத்தனை பேரும், பெண்ணின் உடலை வைத்து தான் சினிமாவில் முன்னேறி வந்தார்கள். உச்ச நட்சத்திரங்களாக கூட இருக்கட்டும், இல்லை அடுத்து நாட்டை ஆள துடிக்கும் நடிகர்களாக கூட இருக்கட்டும் எல்லோரும் தங்களின் ஆரம்பப் படங்களில் பெண்ணின் உடலை மையமாக வைத்து தான் சினிமாவில் பயணப்பட்டு வந்தார்கள்.
நான் சிறுவயதில் பார்த்த ரஜினி படமாக இருக்கட்டும், கமல் படமாக இருக்கட்டும், அதில் சில்க் ஸ்மிதா போஸ்டர் தான் பெரிதாக இருக்கும். சில்க் ஸ்மிதாவின் உடலை மையமாக வைத்து தான் அந்த படங்களின் போஸ்டர் பெரிதாக இருக்கும். அதில் சிறிய உருவில் தான் நடிகர்களின் உருவம் இருக்கும்.
இவ்வாறு இந்த ஆணாதிக்க சமூகத்தில் இருக்கும் கதாநாயகர்கள், தற்போது எந்த நடிகைகளின் பிரச்சனைக்கும் கேள்வி எழுப்ப மாட்டார்கள்.
ஆனாலும், அவர்கள் தான் பெண்ணை உடலாக பாருங்கள் என போதிக்கும் சினிமாவை தொடர்ந்து எடுப்பவர்கள். பெண்ணை உடலாக பாவிக்க வைக்கும் போக்கை ஏற்படுத்துகிற நாயகர்கள் பெண் விடுதலை குறித்து பேசமாட்டார்கள்.
அவ்வாறு, அவர்கள் பேசினால் அதற்கு பின்னால் ஏதும் சுயநலம் இருக்கும். அப்படித்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
Listen News!