பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் அவரின் மரணத்தில் மர்மம் இன்னும் வெளியாகவில்லை என்று தான் கூற வேண்டும். பெரும் பரபரப்புக்கு காரணமான சுஷாந்த் சிங் வழக்கில், திருப்பங்களுக்குப் பின் திருப்பமாக இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
சுஷாந்த் சிங்கை பிரேத பரிசோதனை செய்த ஊழியர் ஒருவர் கூறியது தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதாவது அந்த மருத்துவ ஊழியர், சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை என்றும் அது கொலை என கூறியுள்ளார்.
சுஷாந்த் சிங்கை பிரேத பரிசோதனை செய்த ரூப் குமார் ஷா இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது மரணத்தில் இருந்த மர்மங்கள் குறித்து பேசினார்.
அவர் தெரிவிக்கையில், “சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்தபோது, கூப்பர் மருத்துவமனையில் ஐந்து உடல்களை பிரேத பரிசோதனை செய்தோம். ஐந்து உடல்களில் ஒன்று விஐபியின் உடல்.
பிரேத பரிசோதனை செய்த போது, சுஷாந்த் சிங் இறந்துவிட்டதாகத் தெரிய வந்தது. உடலில் பல தடயங்கள் இருந்தன. கழுத்தில் இரண்டு மூன்று அடையாளங்கள் இருந்தது. பிரேதப் பரிசோதனையை பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் உயர் அதிகாரிகள் உடலின் படங்களை மட்டும் கிளிக் செய்யுமாறு கூறினர். நாங்கள் அவ்வாறு செய்தோம்.
சுஷாந்தின் உடலை முதன் முதலில் பார்த்த போது அது தற்கொலை அல்ல கொலை என்று நினைத்தேன்.அத்தோடு இதை உயர் அதிகாரிகளிடம் சொன்னேன். நான் விதிகளின்படி வேலை செய்ய வேண்டும். புகைப்படத்தை கிளிக் செய்யும் படி மூத்த அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.
உடலை விரைவில் பிரேத பரிசோதனை செய்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். அதனால் இரவில் பிரேத பரிசோதனை செய்தோம். இது தற்கொலை இல்லை, கொலை என சொன்னேன். யாரும் என்னை கவனிக்கவில்லை. சுஷாந்த் உடல் சிதைந்த நிலையில் இருந்தது.அத்தோடு கை, கால்கள் உடைந்த நிலையில் அவர் தூக்கில் தொங்கியிருக்க வாய்ப்பில்லை, அது சாத்தியமற்றது. மேலும், ஒருவர் தூக்கில் தொங்கும் போது, கழுத்தில் காணப்படும் தழும்புகள் வித்தியாசமாக இருக்கும்.
வேலையில் யாருக்கும் பிரச்னை ஏற்படக் கூடாதென்ற நோக்கத்தில் தான் இவ்வளவு நேரம் பேசவில்லை. எனினும் தற்போது கூப்பர் மருத்துவமனை பிணவறையில் பணியாற்றி வந்த நான் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றேன்” என்றார். நடிகர் சுஷாந்த் சிங் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் உள்ள பாந்த்ரா குடியிருப்பில் இறந்து கிடந்தார். அத்தோடு இதை மும்பை காவல் துறையினர் விசாரணை செய்து வந்தனர். இதன் பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சுஷாந்த் மரணம் தொடர்பான வழக்கு பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!