• Nov 10 2024

உதயநிதியின் 'மாமன்னன்' சம்பவம் பண்ணியதா..? சலிப்படைய வைத்ததா..? திரை விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கியிருக்கும் மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். அவருடன் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. எனவே இப்படத்தினுடைய திரை விமர்சனம் குறித்துப் பார்ப்போம்.


கதைக்கரு

முதலில் இப்படத்தினுடைய திரைக்கதை குறித்துப் பார்ப்போம். அதாவது அடங்கி நடக்க வேண்டும் என நினைக்கும் ஆதிக்க வர்க்கத்தினர், சமூகத்தில் முன்னேற நினைத்து அனைவரையும் சமமாக பார்க்க சொல்லும் பட்டியலின மக்கள் என  மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போல, ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளத்தையும், அரசியலையும் ஆதிக்க சாதியினர் தங்களுக்கு சாதகமாக எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மாமன்னன் படத்தின் மூலமாக தெளிவாக உணர்த்தி இருக்கின்றார்.

அந்தவகையில் சமூகநீதி சமத்துவ மக்கள் கழகத்தின் மாவட்டச் செயலாளர் ஆதிக்க வர்க்கத்தை சார்ந்த ஃபகத் பாஸில். அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ பட்டியலின சமூகத்தைச் சார்ந்த வடிவேலு. வடிவேலின் மகனாக உதயநிதி ஸ்டாலினும், அவரது காதலியாக கீர்த்தி சுரேஷும் வருகின்றனர். 

இந்நிலையில் உதயநிதியின் இடத்தில் கீர்த்தி சுரேஷ் நடத்தி வரும் இலவச கல்வி மையத்தை  ஃபஹத் ஃபாசிலின் உடைய அண்ணனாக வரும் சுனில் சேதப்படுத்துகிறார். இதற்காக பேச்சுவார்த்தை நடத்த வரும் இடத்தில் வடிவேலு சரிசமமாக நடத்தப்படாததை கண்டு அவரின் மகன் உதயநிதி கோபத்தில் கொதித்தெழுகிறார். 

இதன் உச்சகட்டமாக ஃபஹத்தை அடிக்கிறார். இதனைத் தொடர்ந்து கட்சியில் எழும் பிரச்சினையால் வேறு கட்சிக்கு ஃபஹத் செல்கிறார். இதனையடுத்து சட்டசபை தேர்தலும் வருகிறது. ச.ச.ம.க கட்சி சார்பில் வடிவேலு  நிற்கிறார். அந்த தேர்தலில் அவர் ஜெயித்தாரா? இல்லையெனில் ஆதிக்க வர்க்கத்தினரின் மனநிலை வென்றதா? என்பது தான் மாமன்னன் படத்தின் உடைய மீதிக்கதையாக அமைந்துள்ளது.


நடிகர்களின் நடிப்பு எப்படி?

அந்தவகையில் இப்படத்தில் ஒவ்வொருவரும் கனகச்சிதமாக தங்களுடைய கேரக்டரை திறம்பட செய்திருக்கின்றார்கள்.  

இருப்பினும் ஒரு சில காட்சிகள் கண் கலங்க வைப்பதும், சில காட்சிகள் படம் பார்ப்பவர்களை வெகுண்டெழவும் வைக்கிறது. 

அதுமட்டுமல்லாது ஒருபக்கம் வடிவேலு, இன்னொரு பக்கம் ஃபஹத் பாசில் என நடிப்பில் இருவரும் மிரட்டியிருக்கிறார்கள். 


படம் எப்படி?

இப்படமானது மிரட்டலான முதல் பாதி கதை, யூகிக்க வைக்கும் இரண்டாம் பாதி எனக் கொண்டமைந்துள்ளது. இருப்பினும் சலிப்பு தட்டாத திரைக்கதையானது படம் பார்ப்பவர்களை கட்டிப் போடுகிறது. 

அத்தோடு படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைந்துள்ளது. பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தாலும் படத்திற்கு அப்பாடல்கள் எதுவும் தடையாக அமையவில்லை. 

அதேபோன்று வசனங்கள் ஒவ்வொன்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை திறம்படப் பேசுகின்றன. 

தொகுப்பு 

எனவே மொத்தத்தில் மாமன்னன் படம் உதயநிதிக்கு சிறந்த ஃபேர்வெல் பார்ட்டியாகவும், வடிவேலு மற்றும் மாரி செல்வராஜின் ஆளுமைக்கு தீனி போடும் படமாகவும் அமைந்துள்ளது. ஆகவே ரசிகர்கள் நம்பிக்கையோடு திரையரங்கிற்கு சென்று இப்படத்தினைப் பார்க்கலாம்.

Advertisement

Advertisement