விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் கடந்த ஜனவரி 11-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த இந்த இரண்டு படங்களும் ஒரே வாரத்தில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது என்று கூறப்பட்டது.
மேலும் எந்த படத்திற்கு வசூல் அதிகம் என்கிற பிரச்னை வரும் என்பதும் எல்லோரும் எதிர்பார்த்தது தான். இது பற்றி தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.வாரிசு படம் ஏழு நாட்களில் 210 கோடி வசூலித்து இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றனர். இது உண்மையான வசூல் விவரம் தானா என தற்போது விமர்சனம் எழுந்திருக்கிறது.
வாரிசு 210 கோடி வர வாய்ப்பே இல்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்து இருக்கிறார்.மேலும் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்த திருப்பூர் சுப்ரமணியன் தனது தியேட்டரில் இரண்டு படங்களும் பெற்ற வசூல் பற்றி கூறி இருக்கிறார்.
"எனது தியேட்டரில் வாரிசு 63,79,933 ரூபாயும், துணிவு படம் 64,40,839 ரூபாயும் வசூலித்து இருக்கிறது. இரண்டுக்கும் வெறும் 60 ஆயிரம் தான் வித்தியாசம். இதுவும் ஷோ எண்ணிக்கை வித்யாசத்தால் தான் வந்தது. அதனால் இரண்டு படங்களும் நிஜத்தில் சம அளவு தான் வசூலித்து வருகிறது" என திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு அனுமதியின்றி அதிகாலை 1 மணி மற்றும் 4 மணிக் காட்சிகள் திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாரிசு - துணிவு படங்கள் திரையரங்க உரிமையாளர்களுக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது
Listen News!