புதுமுக இயக்குநர் மார்டின் நிர்மல் குமாரின் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், பாண்டியராஜன், தீபா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தெய்வ மச்சான்'. இப்படமானது இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தினுடைய கதையினை திரை விமர்சனத்தின் மூலமாக முழுமையாகத் தெரிந்து கொள்வோம்.
கதையின் கரு
அந்தவகையில் இப்படத்தினுடைய கதை குறித்துப் பார்ப்போம். யார் சாகப் போகிறார்கள் என்பதை முன்கூட்டியே அறியும் ஹீரோ தங்கையின் தாலிக்கும் ஆபத்து இருப்பதை அதன் வாயிலாக தெரிந்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்து நடந்தது என்ன? இதுவே தெய்வ மச்சான் படத்தின் திரைக்கதை.
அதவாது தங்கை குங்குமத்தேனை (அனிதா சம்பத்) எப்படியாவது நல்ல படையாக திருமணம் செய்து கரை சேர்த்து விட வேண்டும் என்று போராடும் அண்ணன் கார்த்தி (விமல்). இவரது கனவில் வரும் சாட்டைக்காரன், யார் இறக்க போகிறார்கள் என்பதை முன் கூட்டியே சொல்கிறான். அவர் கனவில் காணுகின்ற படியே உயிரிழப்புகளும் நேர்கின்றன.
இவ்வாறிருக்க அவரின் தங்கைக்கு நல்ல வரன் அமைகிறது. அந்தவகையில் திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு கார்த்தியின் கனவில் வரும் சாட்டைக்காரன் "உன் தங்கச்சி புருஷன் கல்யாணமாகி இரண்டு நாளைக்குள் இறந்து விடுவான்" என்று கூறுகிறான். இதைக் கேட்டு அதிர்ச்சியுறும் ஹீரோ அடுத்து என்ன செய்கிறார் என்பதை கிராமத்து வாடை வீசும் காமெடி பாணியில் விவரிக்கிறது படத்தினுடைய மீதி கதை.
பலம், பலவீனங்கள்
காமெடியை தவிர வேறொன்றுமில்லை!
தெய்வ மச்சான் படத்தின் இயக்குநர் நிர்மலிற்கு இன்னும் கொஞ்சம் சினிமா அனுபவம் தேவை என்பது இப்படத்தின் மூலமாக நன்றாக தெரிகிறது. அதாவது தேவையற்ற காட்சிகளால் ஆரம்பத்திலேயே படம் கொஞ்சம் சோர்வடைய செய்கின்றது.
இருப்பினும் சில இடங்களில் ஒர்க்-அவுட் ஆகாத காமெடி கவுண்டர்கள், பல இடங்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதனால், கதையில் உள்ள குறைகள் கடைசியில் ரசிகர்களின் கவனத்தில் படமால் தப்பித்து விடுகின்றது.
அதுமட்டுமல்லாது சாட்டைக்காரன் கனவில் வரும் காட்சிகள், கொஞ்சம் திகிலூட்டும் வகையில்தான் உள்ளது. இருந்தாலும் அவற்றை இன்னும் கொஞ்சம் நீளமாக வைத்திருக்கலாம்.
ஏமாற்றிய நட்சத்திரங்கள்:
அந்தவகையில் இந்த படத்தில் பாண்டியராஜன், ஆடுகளம் நரேன், தீபா, விமல், வேல ராமமூர்த்தி தவிர வேறு யாரும் தேர்ந்த நடிகர்கள் என கூறும் அளவிற்கு இல்லை எனலாம். ஏனெனில் அனைத்தும் புது முகங்கள்.
இருப்பினும் செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சியில் முகம் காட்டிய அனிதா சம்பத்திற்கு முதல் முறையாக பெரிய ரோல் கொடுத்துள்ளனர். அதை அவர் மிகவும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம்.
அத்தோடு விமல் உட்பட பல நடிகர்கள், கேமரா முன் தயங்கி தயங்கி நடிப்பது போல தோன்றுகிறது. இப்படி பலரின் சொதப்பலான நடிப்பால், மனதில் நிற்க வேண்டிய காட்சிகளும் நழுவி ஓடுகின்றன.
தொகுப்பு
இந்தப் படத்தில் விமலிடம் வித்தியாசமான நடிப்பை எதிர்பார்க்க முடியாது, ஆனால் இந்த கதையில் கொஞ்சம் வித்தியாசத்தை எதிர்பார்க்கலாம். எனவே மொத்தத்தில் பொறுமை அதிகம் இருந்தால் மட்டுமே இந்த படத்தை திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம்
Listen News!