இயக்குநராக இரண்டு படங்கள், குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்தவர் மாரிமுத்து. இதில் எல்லாம் கிடைக்காத பேரும், புகழும் இவருக்கு 'எதிர்நீச்சல்' சீரியலில் கிடைத்தது. வெள்ளித்திரையில் கிடைக்காத அங்கீகாரம் சின்னத்திரையில் கிடைத்ததில் மாரிமுத்துவிற்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரின் முன்னேற்றத்தை விரும்புவர்களுக்கும் கூட.
மிகு குறுகிய காலத்தில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் இட்டு அமர்ந்தார் மாரிமுத்து. இவரை இல்லை என்றால் அந்த சீரியலே இல்லை என சொல்லும் அளவிற்கு தனது கதாபாத்திரத்தில் பக்காவாக பொருந்தி நடித்தார் . ஏய் இந்தாம்மா என அதட்டலாக பேசும் வசனத்தில் இருந்து, மதுரை உடல்மொழி வரை எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாகவே வாழ்ந்தார்.
இதனாலே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பேரும் புகழும் கிடைத்தது. இந்நிலையில் தான் நேற்றைய தினம் அந்த செய்தி இடியென ரசிகர்களின் காதுகளில் விழுந்தது. மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் மரண அடைந்தார்.இப்போது கூட ரசிகர்களால் இந்த செய்தியை உண்மையென நம்பவே முடியவில்லை. மேலும் திரையுலகை சார்ந்த பலரும் மாரிமுத்துவின் மறைவிற்கு கண்ணீருடன் தொடர்ச்சியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாரிமுத்துவுக்கு கல்வி கற்பித்த ஜி.ஆர் வரதராஜு என்பவர் பேட்டியளித்துள்ளார்.மாரிமுத்து நன்றாக படிக்கக்கூடிய மாணவர் என்றும் அனைத்து ஆசிரியர்கள் மீதும் அன்பும் மரியாதையும் கொண்டவர் என்றும் அவரது கையெழுத்து அப்படியே முத்து முத்தாக இருக்கும் .சினிமாவின் மீது ஏற்பட்ட நாட்டம் காரணமாக சென்னைக்கு புறப்பட்டு சென்ற மாரிமுத்து கவிஞர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றினார்.
அதன் பின்னர் மாரிமுத்து பிரபலமான நிலையில் அடிக்கடி பள்ளி விழாக்களுக்கு வருவார். இந்த ஆண்டு கூட ஜனவரி மாதம் எங்கள் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு நடிகர் மாரிமுத்து வந்திருந்தார். அப்படி ஒரு தங்கமான மனிதர். எப்போதுமே ஆசிரியர்கள் மீது மதிப்பு கொண்டவர். எல்லா ஆசிரியர்களும் அவர் மீது அன்பு செய்தனர். இன்னும் படிப்பில் ஆர்வம் செலுத்தி படித்திருந்தால் வேறு ஒரு இடத்திற்கும் அவரால் சென்றிருக்க முடியும் ஆனால், கலை மீது கொண்ட ஆர்வத்தினால் சினிமாவில் போராடி தற்போது தான் பெரிய அளவில் புகழ் அடைய ஆரம்பித்து இருந்தார்.
ஆனால் அதற்குள் பாதியிலேயே அவர் விட்டுச் சென்றது அவரது ஆசிரியர்களான எங்களுக்கு மீள முடியாத துயரத்தை கொடுத்துள்ளது என்றால் அவரது குடும்பத்தினருக்கு எந்த அளவுக்கு அவரது இழப்பு பேரிழப்பாக இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கடவுள்தான் மாரிமுத்துவின் மறைவு துக்கத்திலிருந்து அந்த குடும்பத்தினரை கொண்டு வர வேண்டும் என அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!