• Sep 20 2024

விமான நிலையத்தில் 7மணி நேரம் காத்திருப்பு... டென்ஷனான இசைஞானி... காரணம் என்ன...?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா இசை உலகைத் தனது இன்னிசையால் கடந்த 40 ஆண்டுகளிற்கு மேலாக கட்டிப்போட்டு வைத்திருக்கின்ற ஒருவரே இசைஞானி இளையராஜா. இவர் தற்போது சினிமாவில் இசையமைப்பதை குறைத்துக்கொண்டாலும், உலகமெங்கிலும் இசைக் கச்சேரிகளை நடத்தி அன்றுபோல் இன்றும் பல்லாயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்து வருகிறார். 

அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் இவரது இசைக் கச்சேரிக்கு அதிகளவான மவுசு உள்ளது. அந்தவகையில் இவர் அடுத்ததாக ஹங்கேரி நாட்டில் தன்னுடைய இசைக் கச்சேரியினை நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து ஹங்கேரிக்கு செல்ல இருந்தார்.


அங்கு அவர் செல்ல இருந்த விமானம் அதிகாலை 2 மணிக்கு புறப்படும் என ஏற்கெனவே கூறப்பட்டு இருந்தது. இதற்காக அதிகாலையிலேயே எழுந்து ரெடியாகி விமான நிலையம் வந்தார் இளையராஜா. எனினும் எதிர்பாராத விதமாக சென்னையில் நள்ளிரவு பலத்த மழை பெய்ததன் காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும், தரையிரங்குவதிலும் பெருமளவான சிக்கல் ஏற்பட்டது. 

இதன் காரணமாக ஏராளமான விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது சென்னையில் தரையிறங்க இருந்த விமானங்கள் சில பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கனமழை காரணமாக இளையராஜா, துபாய் செல்ல இருந்த விமானமும் தாமதத்திற்கு உள்ளானது. 

அதாவது அந்த விமானம் புறப்படும் நேரம் முதலில் 2 மணிநேரம் தாமதம் ஆகும் என கூறப்பட்டது. அதன்பின்பு சிறிது நேரம் கழித்து ரன்வேயில் மழைநீர் தேங்கி இருந்ததன் காரணமாக மேலும் 3 மணிநேரம் தாமதம் ஆகும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் மேலும் 2 மணிநேரம் தாமதம் ஏற்பட்டது. 


இவ்வாறாக இளையராஜா விமான நிலையத்தில் 7 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் சற்று டென்ஷனாகி கோபத்திற்கு உள்ளாகி விட்டாராம். எனினும் தன்னை சுதாகரித்துக் கொண்டு, இதன்பின்னரே அவர் துபாய் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement