பத்து தல படத்தை யுஏ சான்றிதழ் காரணம் காட்டி மறுத்ததாக ரோகிணி தியேட்டர் வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் கண்டனங்கள் குவிந்த நிலையில், தற்போது ஐநாக்ஸ் தியேட்டரில் அடுத்த பிரச்சனை வெடித்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று வெளியான விடுதலை திரைப்படம் ஏ சான்றிதழ் படம் என்கிற நிலையிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் தங்கள் குழந்தைகளுடன் படம் பார்த்துள்ளனர்.இந்நிலையில், சென்னையில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கம் ஒன்றில் தனது குழந்தையுடன் விடுதலை படத்தை பார்த்த பெண் ஒருவரை வெளியே அனுப்ப போலீஸார் குவிந்த நிலையில், அவர்களுடன் அந்த பெண் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சிகள் பரபரப்பை கிளப்பி உள்ளன.
சிம்புவின் பத்து தல திரைப்படம் யுஏ சான்றிதழ் படம் என்பதால் நரிக்குறவ இன மக்கள் டிக்கெட் வைத்திருந்த நிலையிலும், அவர்களுடன் வந்திருந்த குழந்தைகள் 12 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாக ரோகிணி தியேட்டர் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த ரோகிணி தியேட்டரை ரசிகர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்.
பத்து தல படத்தின் ஹீரோ சிம்பு இது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் சொல்லாத நிலையில், அந்த படத்தில் நடித்த நடிகை பிரியா பவானி சங்கர் தனது கண்டனத்தை பதிவு செய்தார். மேலும், விடுதலை படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சின்னத்திரை நடிகை மகாலக்ஷ்மி உள்ளிட்ட பலர் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
ரோகிணி தியேட்டரில் பத்து தல படத்தை பார்க்க வந்த மக்களை அனுமதிக்காமல் ஆரம்பத்தில் தடுத்தது மற்றும் அதற்கான விளக்கம் கொடுத்தது என பெரும் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், ஏ சான்றிதழ் பெற்ற விடுதலை படத்தை குழந்தைகளுடன் பார்த்த ஒரு பெண்ணிடம் போலீசார் நடத்திய வாக்குவாதம் அடுத்த சர்ச்சையாக வெடித்துள்ளது.
சென்னையில் உள்ள ஐநாக்ஸ் தியேட்டரில் டிக்கெட் வாங்கிக் கொண்டு தனது குழந்தைகளுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி நடித்த விடுதலை படத்தை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை போலீசார் இந்த படத்தை குழந்தைகள் பார்க்கக் கூடாது, அதற்கு அனுமதி அளிக்க முடியாது, வெளியே போங்க என வெளியேற்ற முயற்சித்தனர்.
18 ஆகலைனா என்ன? என் குழந்தைக்கு என்ன படம் காட்டனும்னு எனக்கு தெரியும்.. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் இருப்பதால் தான் ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இது ஆபாச படம் கிடையாது. அரைகுறை ஆடைகளுடன் குத்தாட்டம் போடும் படங்களை பார்க்க குழந்தைகளை பார்க்க அனுமதிக்கும் போது மக்களின் வலியை காட்டும் விடுதலை படத்தை என் குழந்தைகள் பார்க்கக் கூடாதா என வாக்குவாதம் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஆதரவாக தியேட்டரில் பலரும் குரல் எழுப்பிய வீடியோ காட்சிகள் தீயாய் பரவி வருகின்றன.
Listen News!