பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படமும் உலகளவில் வசூல் சாதனை செய்யும் என ரசிகர்களும், படக்குழுவும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கமல் ஹாசன், பாரதிராஜா, சிம்பு பங்கேற்றனர். கமல் ஹாசன் ட்ரெய்லரை வெளியிட்டார்.
இந்த விழாவில் பேசிய கமல் ஹாசன் உயிரே, உறவே, தமிழே என தனது பேச்சை ஆரம்பித்தார். தொடர்ந்து பேசிய அவர், "எந்த அரங்கம் போனாலும் இந்த வார்த்தை மாறாது. இதே மாதிரியான அன்போட அர்த்தம் தம்பி சிம்புவுக்கும் தெரியும். என்னுடைய சந்தோஷத்துக்கு காரணம் கரோகஷம் மட்டுமல்ல. நல்ல கலைஞர்களுடன் பணியாற்றியதும். மணிரத்னத்தை பார்த்து பொறாமை கொள்பவர்களின் நானும் ஒருவன்.
எனக்கும் அவருக்குமான பந்தம் நாயகனுக்கு முன்னாள் தொடங்கி இப்போதுவரை தொடர்கிறது. கடந்த திங்கள்கிழமை துபாய்க்கு சென்றிருந்தபோது ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கே 50 இசை கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினர். இதனை கண்டதும் மெய்சிலிர்த்துப்போனேன். இப்படிப்பட்ட கலைஞர்கள் எல்லாம் ஒன்றாக இணைய வேண்டும்.
இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம் காதலா வீரமா என பட்டிமன்றம் நடந்தது. இந்தப் படத்தை எடுக்கவே ஒரு தைரியம் வேண்டும். அதை பார்க்கும்போது வீரமும், காதலும் வென்றுள்ளது. அதற்கு உதாரணம் இந்த படத்தில் இணைந்தவர்கள்தான். கனவு கலையாமல் முதல் பாகம் தொடந்து இரண்டாம் பாகம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது சோழர்கள் பொற்காலம் மட்டுமல்ல தமிழ் சினிமாவின் பொற்காலம். அதை தூக்கிப் பிடிக்க வேண்டும். அதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.
Listen News!