இந்திய இசையின் அடையாளமாக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். ரோஜா படத்தில் அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தேசிய விருதை பெற்று அசத்தியவர். அதன் பிறகு 90களில் தமிழ் சினிமாவில் அவரது இசை நிகழ்த்திய மாயாஜாலம் ஏராளம். அதுவரை இளையராஜா தமிழ் இசையின் ஒற்றை அடையாளமாக இருந்த சூழலில் ஏ.ஆர்.ரஹ்மான் அதை தகர்த்தெறிந்தார்.
கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்ற ரஹ்மான் அங்கும் தனது சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தினார். அந்த சமயத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைத்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சமீபத்தில் வெளியான படங்களில் பிரமாண்டமான படம் என்றால் அது பொன்னியின் செல்வன். முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டானது. பாடல்களும், பின்னணி இசையும் தரமானதாக இருந்தது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் நாளை வெளியாகிறது. இதிலும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருந்துவருகின்றனர்.
இந்தச் சூழலில் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. அதில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. அப்போது அவரது மனைவி சாயிரா பானுவும் மேடை ஏறி பேசினார். அவர் பேச ஆரம்பிக்கும்போது, ஹிந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்க ப்ளீஸ் என ரஹ்மான் காதல் கட்டளை விதித்தது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டானது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி சமூக வலைதள பக்கத்தில், "என்னது ஆர் ரஹ்மான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய் மொழி என்ன ? வீட்டுல குடும்பத்தில என்ன பேசுவாங்க? இத்தனை வருஷமா தமிழ் நாட்டுல தானே இருக்காங்க" என பதிவிட்டிருக்கிறார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டில் என்ன மொழி பேசினால் உங்களுக்கு என்ன. இங்கு எல்லோரும் தமிழை முறையாகத்தான் பேசிக்கொண்டிருக்கிறார்களா என தங்கள் பங்குக்கு பதிலடி கொடுத்துவருகின்றனர். மேலும், ஏ.ஆர்.ரஹ்மானை வேண்டுமென்றே கஸ்தூரி இந்த பதிவின் மூலம் வம்புக்கு இழுக்கிறார் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.
Listen News!