தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சமர், ஜமீல், சுபத்ரா, வைதேகி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான 'யாத்திசை' திரைப்படமானது தற்போது திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் குறைவான பட்ஜெட்டிலும் வரலாற்று படங்களை தரமாக சொல்ல முடியும் என்கிற முயற்சியை மேற்கொண்டுள்ள இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது முயற்சியில் வெற்றிக் கண்டாரா? இல்லையா? என்பது குறித்து இந்த படத்தினுடைய திரைவிமர்சனம் மூலம் தெரிந்து கொள்வோம்.
படத்தின் கதை
அந்தவகையில் இப்படத்தின் கதையை எடுத்து நோக்குவோம். அதாவது பாண்டிய பேரரசை வெல்ல சோழர்கள், சேரர்களுடன் இணைந்து எயினர் உள்ளிட்ட சிறு படைகளை கொண்ட கூட்டங்களும் போரிடுகின்றன. 7ம் நூற்றாண்டில் நடைபெறும் இந்த போரில் ரணதீரன் பாண்டியன் தன்னை எதிர்த்துப் போரிட்ட அத்தனை பேரையும் கொன்று குவித்து வெற்றி வாகை சூடுகிறான். போரில் உயிர் தப்பிக்க காட்டுக்குள் சென்று சேரர்களும் எயினர் கூட்டமும் ஒளிந்து கொள்கின்றன.
மேலும் எயினர் கூட்டத்தின் தலைவனாக இருக்கும் கொதி ரணதீரன் பாண்டியனை வென்று ஆட்சியை பிடிப்பேன் என சபதம் ஏற்கிறான். அத்தனை பெரிய பாண்டிய அரசை தனது 500 பேர் கொண்ட குறும்படையை வைத்துக் கொண்டு போரிட்டு வெற்றிப் பெற்றானா? இல்லையா? என்பது தான் யாத்திசை படத்தின் உடைய மீதிக் கதை.
நடிகர்களின் நடிப்பு பிரமாதம்
கொதியாக சேயோன் என்பவரும் ரணதீரன் பாண்டியனாக சக்தி மித்ரனும் லீடு ரோல் ஒன்றில் இப்படத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இதில் நடிகர்கள் அனைவரும் புதிது, அதேபோன்று தொழில்நுட்பக் கலைஞர்கள் புதியவர்கள். ஆனாலும், பெரிய ரிசர்ச் செய்து தரமான ஒரு வரலாற்று படத்தைக் கொடுக்க எடுத்துக் கொண்ட முயற்சி தான் இந்த படத்தில் உள்ள பல குறைகளை மறந்து ரசிகர்களை படம் பார்க்கத் தூண்டுகிறது.
மேக்கிங்
மேலும் சிஜி காட்சிகள் எல்லாம் சொதப்பினாலும், நடிப்பாலும், அவர்கள் பேசும் தமிழாலும், அந்த காலத்தின் அரசியல், நாகரீகம் உள்ளிட்ட பலவற்றை அலசி ஆராய்ந்து இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது படையுடன் பொன்னியின் செல்வன் படத்துக்கே போட்டி போடும் அளவுக்கு ஒரு வரலாற்று படத்தை கொடுத்திருகின்றார். இது பாராட்டுக்குரிய ஒரு விடயம்.
பலம்
இப்படத்தின் பலம் குறித்துப் பார்த்தால், இதுபோன்ற படங்களை இயக்க பல நூறு கோடிகள் பட்ஜெட் வேண்டும் பெரிய நடிகர்கள் நடித்தால் தான் அப்படம் ஓடும் என்கிற மாயை இந்த சிறு குழு உடைத்து இருப்பதே பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
அத்தோடு மலையாளத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டு உள்ளிட்ட பல படங்கள் சிறு பட்ஜெட்டிலேயே சீராக எடுக்கப்பட்டுள்ளன. அதே போன்ற ஒரு முயற்சியை தமிழில் செய்துள்ளனர்.
மேலும் பாலை நிலத்து வீரனாக எயினர் கூட்டத்து தலைவன் கொதி கதாபாத்திரத்தில் சேயோன் நடிப்பில் மிரட்டி உள்ளார். ரணதீரன் பாண்டியனாக நடித்துள்ள சக்தி மித்ரனின் நடிப்பும் சிறப்பு. பாடல்கள் பெரிதாக ஒட்டவில்லை என்றாலும் இசையமைப்பாளர் சக்கரவர்த்தி பிஜிஎம்மில் ஸ்கோர் செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது அகிலேஷ் காத்தமுத்துவின் ஒளிப்பதிவில் படம் சிறிய பட்ஜெட்டிலேயே பிரம்மாண்டமாக தெரிகிறது. கலை இயக்குநரின் பங்களிப்பு மற்றும் ஆடை அலங்காரங்கள் என அனைத்துமே சிறப்பாக உள்ளது.
பலவீனம்
இப்படத்தில் உள்ள குறை என்னவெனில், இப்படம் பெரிய பட்ஜெட் இல்லை, சிஜி சரியில்லை, நடிகர்கள் யாரென்றே தெரியவில்லை. சில இடங்களில் பேசுவதே புரியவில்லை போன்ற விஷயங்கள் பலவீனமாக இருக்கின்றன.
இருப்பினும் எயினர்கள் உயர்வானவர்களா? பாண்டியர்கள் உயர்வானவர்களா? என்பதை தெளிவாக சொல்ல முடியாமல் சில குழப்பங்களில் இயக்குநர் சிக்கி இருப்பது பெரிய மைனஸ் ஆக தெரிகிறது.
தொகுப்பு
குறைகளை தவிர்த்து விட்டு வரலாற்று படங்களை பார்க்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி பொது ரசிகர்களும் தியேட்டரில் தாராளமாக சென்று இந்த படத்தினை கண்டு ரசிக்க முடியும்.
Listen News!