தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகராக திகழ்ந்து வருபவர் நாசர். காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகர் என பல்வேறு பரிமாணங்களில் வலம் வருபவர். எந்த கதாப்பாத்திரமானாலும் தனது சிறப்பான நடிப்பை கொடுக்கக்கூடியவர். இவர் பாலச்சந்தர் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு வெளியான “கல்யாண அகதிகள்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்த நிலையில் திரைப்படத்தில் நடிக்ககூடிய வாய்ப்பு இவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்தான ஒரு சுவாரஸ்ய தகவலை இப்போது பார்க்கலாம்.நாசர் இளம் வயதில் இருந்தே சினிமாக்களின் மீது நாட்டம் கொண்டிருந்தார். குறிப்பாக உலக சினிமாக்களை தேடி தேடி சென்று பார்ப்பாராம். எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆர்வம் கொண்டிருந்தாராம்.
இவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே மேடை நாடகங்களில் நடிப்பதில் ஈடுபாடு கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து நடிப்பு பயிலரங்கத்தில் இணைந்து படித்தார்.அப்போது பல இயக்குநர்களின் அலுவலகங்களுக்கு சினிமா வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்தாராம். குறிப்பாக பாலச்சந்தர் படத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆவல் இருந்ததால் அடிக்கடி பாலச்சந்தரின் அலுவலகத்திற்கு செல்வாராம்.
அப்போது ஒரு நாள் பாலச்சந்தரை நேரில் பார்க்க நேர்ந்திருக்கிறது.நாசரை பார்த்த பாலச்சந்தர், “உன்னுடைய மூக்கு ஒரு மாதிரி நல்லா பெருசா வித்தியாசமா இருக்கே” என கூறியிருக்கிறார். உடனே நாசரிடம் எந்தளவுக்கு சினிமா ஆர்வம் இருக்கிறது என விசாரித்திருக்கிறார். அப்போது நாசர், பல உலக சினிமாக்களை பார்த்த அனுபவங்களை எல்லாம் கூறியிருக்கிறார்.
நாசர் இவ்வாறு கூறியதும் பாலச்சந்தர், “நான் சில வசனங்களை கொடுக்கிறேன். நடித்துக்காட்டு” என கூறியிருக்கிறார். உடனே நாசர் நடித்துக்காட்ட, பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்துப்போனது. அவ்வாறுதான் பாலச்சந்தர் இயக்கிய, “கல்யாண அகதிகள்” என்ற திரைப்படத்தில் நடித்தார் நாசர்.
Listen News!